

மவுண்ட் மவுங்கனுயி: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்ததில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது வங்கதேச அணி.
மவுண்ட் மவுங்கனுயி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 328 ரன்களும், வங்கதேசம் 458 ரன்களும் குவித்தன. 130 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 73.4 ஓவர்களில் 169 ரன்களுக்கு சுருண்டது.
40 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. நியூஸிலாந்துக்கு எதிராக17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள வங்கதேச அணி தற்போதுதான் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 17டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் இருந்த நியூஸிலாந்து அணியின் வெற்றி வேட்டைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.