Last Updated : 04 Jan, 2022 01:01 PM

 

Published : 04 Jan 2022 01:01 PM
Last Updated : 04 Jan 2022 01:01 PM

ஐபிஎல் 2022; அகமதாபாத் அணிக்குப் பயிற்சியாளரான முன்னாள் வேகப்பந்துவீச்சாளர்: மென்ட்டராகிறார் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான்

கோப்புப்படம்

புதுடெல்லி: 2022-ம் ஆண்டு ஐபிஎல் டி20 சீசனில் புதிதாகப் பங்கேற்க இருக்கும் அஹமதாபாத் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா நியமிக்கப்பட உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகமதாபாத் அணியின் மென்ட்டராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீர்ர கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட உள்ளார். அணி நிர்வாக இயக்குநராக இங்கிலாந்து அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் விக்ரம் சோலங்கி நியமிக்கப்பட உள்ளார்.

2022-ம் ஆண்டு நடக்கும் ஐபிஎல் டி20 தொடரில் லக்னோ, அகமதாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இரு அணிகள் வருகின்றன. 2022 ஐபிஎல் ஏலம் பிப்ரவரி மாதமும், ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதமும் நடக்கும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே இருக்கும் 8 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவித்துவிட்டன. 19 உள்நாட்டு வீரர்கள், 8 வெளிநாட்டு வீரர்களை 8 அணிகளும் தக்கவைத்துள்ளன.

இந்நிலையில் புதிதாக வரும் லக்னோ அணிக்குத் துணைப் பயிற்சியாளராக அனுபவம் மிகுந்த விஜய் தைய்யா நியமிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு களமிறங்கும் அணிக்குப் பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஐபிஎல் அமைப்பின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “அகமதாபாத் அணிக்குத் தலைமைப் பயிற்சியாளராக ஆஷிஸ் நெஹ்ராவை நியமிக்கப் பேச்சுவார்த்தை முடிந்து கையொப்பமும் முடிந்துவிட்டது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். அணிக்காக மென்ட்டராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் நியமிக்கப்படலாம். அவருடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அணியின் நிர்வாக இயக்குநராக இங்கிலாந்து முன்னாள் வீரர் விக்ரம் சோலங்கி நியமிக்கப்பட உள்ளார்” எனத் தெரிவித்தார்.

ஆஷிஸ் நெஹ்ரா இதற்கு முன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்குப் பயிற்சியாளராக இருந்துள்ளார். கிறிஸ்டனும் இந்த அணிக்குப் பயிற்சியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்கு கிறிஸ்டன் பயிற்சியாளராக இருந்தபோது, அணியில் வீரராக நெஹ்ரா விளையாடியவர் என்பதும் கவனிக்கத்தக்கது. விக்ரம் சோலங்கியுடனும் நெஹ்ரா ஏற்கெனவே ஐபிஎல் தொடரில் பணியாற்றியிருப்பதால், பெரிதாக சிரமங்கள் இருக்காது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x