Last Updated : 31 Dec, 2021 02:48 PM

 

Published : 31 Dec 2021 02:48 PM
Last Updated : 31 Dec 2021 02:48 PM

4-ம் இடத்தில் விராட் கோலி: டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைக் கேப்டனாக வலம்வர சாத்தியங்கள் என்னென்ன?

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி | கோப்புப்படம்

செஞ்சூரியன்: உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற பெயரோடு கேப்டன் விராட் கோலி விடைபெறுவதற்கான சாத்தியங்கள் எழுந்துள்ளன. செஞ்சூரியனில் இந்திய அணி பெற்றது, கோலியின் தலைமைக்கு கிடைத்த 40-வது டெஸ்ட் வெற்றியாகும்.

செஞ்சூரியனில் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. செஞ்சூரியனில் தென் ஆப்பிரி்க்க அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். இதற்கு முன் 2 தோல்விகளை மட்டுமே இந்த மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணி சந்தித்திருந்தது. தென் ஆப்பிரிக்காவிலேயே மிகவும் டினமான மைதானமும் செஞ்சூரியன்தான். அதுமட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி பெற்ற 4-வது வெற்றியாக அமைந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான வெற்றிகளைப் பெற்ற கேப்டன்களில் தற்போது விராட் கோலி 40 வெற்றிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் சாதனையான 41 வெற்றிகளை சமன் செய்ய கோலிக்கு இன்னும் ஒரு வெற்றிதான் தேவை. 2-வது இடத்தில் இருக்கும் பான்டிங் தலைமையில் 48 வெற்றிகளைப் பெற்றுள்ளார்; தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் 53 வெற்றிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

இவர்களின் வெற்றிகளை முறியடித்து, உலகிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற பெருமையை கோலியால் பெற முடியுமா, அதற்கான சாத்தியங்கள் உள்ளனவா என்ற கேள்வி இப்போது எழுகிறது.

உலகிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டன்களில் 4-வது கேப்டனாக வலும் வரும் கோலிக்கு தற்போது 33 வயதாகிறது. முதல் 3 இடங்களில் இருக்கும் கேப்டன்கள் அனைவரும் 38 வயது வரை விளையாடியவர்கள். ஆதலால், கோலி இன்னும் 5 ஆண்டுகள் வரை டெஸ்ட் கிரிக்கெட் விளையாடலாம். ஸ்டீவ் வாஹ் 38 வயதிலும், பான்டிங் 37 வயதிலும் விளையாடினார்கள், ஸ்மித் 33 வயதில் ஓய்வு பெற்றார். கோலியின் உடற்தகுதி, ஃபார்ம், அணியை நிர்வகிக்கும் திறமையால் இன்னும் 5 ஆண்டுகள் வரை விளையாடலாம்.

ஸ்மித், பான்டிங், வாஹ்ஹை கோலியால் முந்த முடியுமா?

ஸ்டீவ் வாஹின் 41 விக்கெட் சாதனையை முறியடிக்க கோலித் தலைமைக்கு 2 வெற்றிகள் தேவை. அதை தென் ஆப்பிரிக்கத் தொடரிலேயே கோலி தலைமை சாதித்துவிடுவார். அல்லது சமன் செய்துவிடுவார். 2022-ம் ஆண்டில் இந்திய அணி உள்நாட்டில் 3 டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. அதில் இலங்கை அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளை இந்திய அணி நிச்சயம் வெல்லும் பட்சத்தில் கோலியின் வெற்றிக் கணக்கு 43 ஆக உயரும். உள்நாட்டில் இந்திய அணி வலுவான அணி என்பதால், இந்திய அணி பெறும் வெற்றி கோலியை பான்டிங் அருகே கொண்டு செல்லும். 2023-ம் ஆண்டு ஜூலை மாத முடிவில், அதாவது கோலி தனது 35 வயதில் பான்டிங்கின் 48 வெற்றிகளை சமன் செய்வார் அல்லது முறியடிக்கவும் வாய்ப்புண்டு.

அதன்பின் 2 சீசன்களில் கோலி டெஸ்ட் போட்டிகளில் விளையாடினாலே ஸ்மித்தின் 53 வெற்றிகளை எளிதாக கோலியால் சமன் செய்யலாம் அல்லது முறியடிக்கலாம். 2022-23 உள்நாட்டில் நடக்கும் டெஸ்ட் தொடர், 2023-24-ம்ஆண்டில் அக்டோபர் – ஜனவரியில் உள்நாட்டுத் தொடர் ஸ்மித் சாதனையை கோலி முறியடிக்க போதுமானது. ஆனால், அதுவரை கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்படாமல் இருக்கவேண்டும்.

விராட் கோலி கேப்டன் பதவி பறிக்கப்படாமல் இருக்க அவர் பேட்டிங்கில் ஃபார்ம் குறையாமல் இருக்க வேண்டும். தற்போது கோலி 98 டெஸ்ட் போட்டிகளில் 7,854 ரன்களுடன் 50.34 சராசரியுடன் உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டுக்குப் பின் கோலி ஒரு சதம் கூட சர்வதேச அரங்கில் டெஸ்ட் போட்டியில் அடிக்கவில்லை. வெறும் கேப்டன் எனும் கேடயத்துக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு மட்டும் கோலியால் காலத்தை நகர்த்துவது கடினம். பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடக்கூடிய கோலி மீண்டும் ஃபார்முக்குத் திரும்புவதன் மூலம் கேப்டன் பதவியைத் தக்கவைக்க முடியும்.

மிக்சிறந்த கேப்டன் கோலி

இந்தியக் கேப்டன்களிலேயே டெஸ்ட் போட்டிகளில் அதிகமான வெற்றிகளைப் பெற்ற கேப்டன் கோலி 40 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார். தோனி (27), கங்குலி (21), அசாருதீன் (14) முறையே அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஒரு காலண்டர் ஆண்டில் வெளிநாடுகளில் 4 வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த முதல் கேப்டன் கோலிதான். பிரிஸ்பேன், லார்ட்ஸ், ஓவல்,செஞ்சூரியனில் இந்திய அணி வென்றுள்ளது. கடந்த 2018-ல் ஜோகன்னஸ்பர்க், நாட்டிங்ஹாம், அடிலெய்ட், மெல்போர்னில் இந்திய அணி வென்றுள்ளது.

சென்சூரியனில் இந்திய அணிக்கு வெற்றித் தேடித்தந்த முதல் கேப்டன் கோலிதான். ஆசியாவிலேயே முதல் அணியாக செஞ்சூரியனில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் நசீர் ஹூசைன் (2000), ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் (2004) ஆகியோர் மட்டுமே செஞ்சூரியனில் வென்றனர்.

சேனா நாடுகள் எனச் சொல்லப்படும் தென் ஆப்பிரி்க்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு எதிராக அதிகமான வெற்றிகளைப் பெற்ற ஆசியாவைச் சேர்ந்த கேப்டனும் கோலி மட்டும்தான். இதுவரை 23 டெஸ்ட் போட்டிகளில் 7 வெற்றிகள், 13 தோல்வி, 3 போட்டிகளை டிரா செய்துள்ளார். வெளிநாடுகளில் கோலியின் தலைமையில் இந்திய அணி 36 டெஸ்ட் போட்டிகளில் 16 போட்டிகளை வென்றுள்ளது.

சென்சூரியனில் இதுவரை தென் ஆப்பிரிக்க அணியை இந்திய அணி வென்றதில்லை. முதல்முறையாக கோலி தலைமைதான் இந்திய அணிக்கு வெற்றி கிட்டியுள்ளது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இதுவரை 3 வெற்றிகளைப் பெற்ற இந்தியக் கேப்டனும், ஆசியக் கேப்டனும கோலி மட்டும்தான். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் இரு டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற கேப்டனும் கோலி மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x