சில மாதங்களாகவே ரசிகர்களுக்கும் நாட்டுக்கும் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டோம்: அஞ்சேலோ மேத்யூஸ் வருத்தம்

சில மாதங்களாகவே ரசிகர்களுக்கும் நாட்டுக்கும் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டோம்:  அஞ்சேலோ மேத்யூஸ் வருத்தம்
Updated on
1 min read

ஐசிசி டி20 உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியது மட்டுமல்ல, கடந்த சில மாதங்களாகவே இலங்கை கிரிக்கெட் அணி சரியாக ஆடாமல் ரசிகர்களுக்கும், நாட்டுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்று கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 டி20 சர்வதேச போட்டிகளில் யு.ஏ.இ., ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவை ஒரு போட்டியில் இலங்கை வீழ்த்தியதோடு சரி. மற்றபடி அதன் கிரிக்கெட் சில மாதங்களாகவே கடும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

“சில மாதங்கள் இலங்கை கிரிக்கெட்டுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்து விட்டது ரசிகர்கள், ஒட்டுமொத்த நாட்டுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டோம். நாங்கள் தரமான கிரிக்கெட்டை ஆடவே இல்லை என்பதே உண்மை.

நாம் இப்போது செய்யக் கூடியதெல்லாம் அணிச்சேர்க்கையை மாற்றாமல் ஒரே அணிச்சேர்க்கையை ஸ்திரப்படுத்துவதேயாகும். 20 வீரர்களைத் தேர்வு செய்து 6 மாதங்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அதன் பிறகு மதிப்பீடு செய்ய வேண்டும். வாய்ப்பு வழங்கிய பிறகு அவர்கள் இந்த உயர் மட்டத்திற்கு தகுதியுடையவர்கள்தானா என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். நாம் பொறுமை காப்பது அவசியம்.

லஷித் மலிங்காவை இழந்தது பெரிய அடிதான், ஆனால் இந்த மோசமான ஆட்டத்திற்கு அதனை ஒரு சாக்காகக் கூற முடியாது. மலிங்கா நிறைய போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார் என்பது உண்மைதான், அவர் இருந்திருந்தால் ஓரளவுக்கு நன்றாக ஆடியிருக்கலாம்.

இங்கிலாந்துக்கு எதிராக நெருக்கமாக வந்தே தோல்வி கண்டோம். 4 விக்கெட்டுகளை (15) குறைந்த ரன்களுக்கு இழந்தபிறகே மீண்டெழுந்தோம், உறுதியுடன் இங்கிலாந்து ஆடியதை பாராட்ட வேண்டும்.

15/4 என்ற நிலையில் இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற மனநிலையில் சில பவுலர்களை குறிவைத்து அடிக்க நானும் கபுகேதராவும் முடிவெடுத்தோம். கடைசியில் எதிர்முனையில் சரியான பேட்ஸ்மென் இல்லை, இருந்திருந்தால் அவரிடம் ஸ்ட்ரைக் கொடுத்திருப்பேன். பென் ஸ்டோக்ஸ் கடைசி ஓவரை அருமையாக வீசினார். இங்கிலாந்து பேட்ஸ்மென்களும் முதல் 6 ஓவர்களில் கட்டுப்படுத்திய பிறகு தொடர்ந்து தாக்குதல் ஆட்டம் ஆடினர்.

இவ்வாறு கூறினார் மேத்யூஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in