Published : 14 Jun 2014 05:02 PM
Last Updated : 14 Jun 2014 05:02 PM

இளம் வீரர்களுக்குச் சோதனை காத்திருக்கும் வங்கதேசத் தொடர்

நாளை டாக்காவில் இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டித் தொடங்குகிறது.

முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இளம் இந்திய அணி வங்கதேச அணியின் உஷ்ணத்தையும், அதன் அதிகம் சத்தம்போடும் ரசிகர்களையும் ஒருங்கே எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

எதிர்பார்ப்பது போல் ரெய்னாவுக்கு அவ்வளவு சுலபமாக அங்கு விஷயங்கள் கை கூடாது என்றே தெரிகிறது. ஆனால் வங்கதேச அணியும் சிக்கலில்தான் உள்ளது.

அதன் தொடக்க வீரர் தமிம் இக்பால் பார்மில் இல்லை. அவர் நிச்சயம் இந்தத் தொடரை தனக்கான வாய்ப்பாக கருதுவார். இங்குதான் இந்தியாவுக்குச் சவால் காத்திருக்கிறது. 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிம் இக்பால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜாகீர் கான் மற்றும் முனாப் படேலை மேலேறி வந்து அலட்சியமாக சிக்ஸ் அடித்ததை இந்திய ரசிகர்கள் இன்னமும் மறந்திருக்க முடியாது என்றே கூறலாம்.

ராபின் உத்தப்பா 2007 உலகக் கோப்பைத் தோல்விகளின் போது துவக்க வீரராக களமிறங்கினார். அவருக்கு வங்கதேசத்துக்கு எதிராக அப்போது பெற்ற தோல்வியின் வலி இன்னமும் இருக்கும் என்றே நம்பலாம். உத்தப்பா, ரஹானே துவக்க வீரர்களாகக் களமிறங்க வாய்ப்பிருக்கிறது.

அம்பாத்தி ராயுடு, ரெய்னா, விருத்திமான் சாஹா, வரை அணியின் வரிசை ஓரளவுக்குத் தெரிகிறது. பந்து வீச்சு வரிசை எவ்வாறு அமையும் என்பதை ஊகிக்க முடியவில்லை.

உமேஷ் யாதவ், மோகித் சர்மா இருவரும் அணியில் இருந்தாக வேண்டும். அமித் மிஸ்ரா, ஸ்டூவர்ட் பின்னி, வேண்டுமானால் மனோஜ் திவாரி, செடேஷ்வர் புஜாரா சேர்க்கப்படலாம். அல்லது மனோஜ் திவாரியை அணியில் எடுத்துக் கொண்டு அக்‌ஷர் படேல் என்ற இடது கை சுழற்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பளிக்கலாம். கேதர் ஜாதவ் என்ற அதிரடி வீரரும் வரிசையில் காத்திருக்கிறார். காஷ்மீர் ஆல்ரவுண்டர் பர்வேஸ் ரசூலுக்கு வாய்ப்பளித்தால் நல்லது. ஏனெனில் அவர் மிகவும் ஆவலாக உள்ளார். இதனை அவர் பல நேர்காணல்களில் தெரிவித்துள்ளார்.

இறுதி 11 எப்படி இருக்கும் என்று ஓரளவுக்குத்தான் ஊகிக்க முடிகிறது. வங்கதேசத்தின் சுழற்பந்து வீச்சு பலத்தை முறியடிக்கும் விதமாக நடுக்கள பேட்டிங் வரிசை அமைய வேண்டும். ஏனெனில் ஷாகிப் அல் ஹசன், அப்து ரசாக் அனுபவமிக்க பந்து வீச்சாளர்கள் ஆவர்.

வங்கதேச அணியின் துவக்க வீரர் அனாமுல் ஹக் தன்னுடைய திறமை என்னவென்று நடந்து முடிந்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் காண்பித்துள்ளார். இன்று உலக கிரிக்கெட்டில் ஷாட்பிட்ச், பவுன்சர் வீசினால் இயல்பாக அதனை ஹூக் மற்றும் புல் செய்யும் ஒரு சில அரிய வீரர்களில் இவரும் ஒருவர். எனவே அவரை ஷாட் பிட்ச் சோதனை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

முஷ்பிகுர் ரஹிம் இந்திய அணி குறித்து மிகவும் நக்கலாகக் குறிப்பிட்டது நினைவிருக்கலாம். தோற்றால் அது இந்தியாவாகத்தான் இருக்கும் இந்தியா ஏ அல்ல என்றார்.

அவரது இந்தக் கூற்று கொடுக்கும் தைரியத்தை அவரது கேப்டன்சியும் ஆட்டமும் காண்பித்தால் இந்தியாவுக்குச் சவால் உள்ளது என்று கூற முடியும்.

அவரது இந்தக் கூற்றை நினைவில் கொண்டு தொடக்கம் முதலே ஆக்ரோஷம் காட்ட வேண்டும் இந்திய அணி. மந்தத் தன்மை காண்பித்தால் முஷ்பிகுர் கூற்று உண்மையானாலும் ஆகிவிடும்.

தொடக்கம் முதலே எழும்ப விடாமல் அடிக்க வேண்டும். அதற்கு ரெய்னாவின் மனோநிலை மிகவும் பாசிடிவ்வாக இருப்பது அவசியம். அப்படியல்லாமல் இளம் வீரர்கள்... முதல் தொடர்... நாம் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று எதிர்மறை மனப்போக்கைக் கொண்டிருந்தால் நிச்சயம் முஷ்பிகுர் கூற்று உண்மையாகிவிடும்.

இந்த எச்சரிக்கை உணர்வுடன் இந்தத் தொடரில் நாளை இந்தியா களமிறங்க வேண்டும். நாளை ஆட்டம் இந்திய நேரம் பகல் 12.30 மணிக்குத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x