

டி 20 உலக கோப்பை முதல் சுற்று போட்டியில் பி பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 10 சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் இன்று ஏ பிரிவில் முக்கியமான கடைசி லீக் ஆட்டம் ஒன்றில் வங்கதேசம் - ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தர்மசாலாவில் நடைபெறுகிறது.
வங்கதேச அணி தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அயர்லாந்துடன் மோதிய ஆட்டம் மழை காரணமாக ரத்தாகியிருந்தது. அதேவேளையில் அறிமுக அணியான ஓமன் தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது. நெதர்லாந்து அணியுடனான ஆட்டம் மழையால் ரத்தாகியிருந்தது.
இரு அணிகளுமே தலா 3 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் இன்று கடைசி லீக் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 10 சுற்றுக்கு தகுதி பெறும். வழக்கமாக முன்னணி அணிகளுக்கு உலக கோப்பை தொடர்களில் வங்கதேச அணிதான் இதுவரை அதிர்ச்சி கொடுத்து வந்துள்ளது. இம்முறை இந்த நிலைமை மாறுமா என்பது இன்றைய ஆட்டத்தில் முடிவில் தெரியும். முன்னதாக பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நெதர்லாந்து-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளுமே சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.