

டி 20 உலகக் கோப்பையில் குரூப் 1-ல் இடம் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா-மேற்கிந்தியத் தீவுகள் நேற்று நாக்பூரில் மோதின. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் டேரன் சமி பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தது.
ஹஸிம் ஆம்லா 1 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் டுபிளெஸ்ஸி 9 ரன்னில் ஆந்த்ரே ரஸல் பந்திலும், ரோஸவ் ரன் எதும் எடுக்காமல் கெய்ல் பந்தில் வெளியேறினர். பவர் பிளேவில் தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது.
12 பந்தில் 10 ரன் எடுத்த நிலையில் பிராவோ பந்தில் டி வில்லியர்ஸ் போல்டானார். அப்போது ஸ்கோர் 7.4 ஓவரில் 46 ஆக இருந்தது. அடுத்து வந்த டேவிட் மில்லர் 1 ரன்னில் கெய்ல் பந்தில் போல்டாகி நடையை கட்டினார். 10 ஓவரில் தென் ஆப்பி ரிக்கா 57 ரன்களை சேர்த்தது.
நீண்ட நேரம் தாக்குப்பிடித்து ஆடிய தொடக்க வீரரான குயின்டன் டி காக் 46 பந்தில், 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 47 ரன் எடுத்து ரஸல் பந்தில் போல்டானர். 16.2 ஓவரில் தென் ஆப்பிரிக்கா 100 ரன்களை கடந்தது. 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய வைஸ் 26 பந்தில் 28 ரன் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை பிராவோ கைப்பற்றினார்.
கடைசி கட்டத்தில் மோரிஸ் 16, ஆரோன் பாங்கிஸோ 4 ரன் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஆந்த்ரே ரஸல், கெய்ல், பிராவோ தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 123 ரன்கள் இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் பேட் செய்ய தொடங்கியது.