Published : 24 Dec 2021 03:39 PM
Last Updated : 24 Dec 2021 03:39 PM

அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ஹர்பஜன் சிங் ஓய்வு: முடிவுக்கு வந்த 23 ஆண்டு கால ஆடுகள வாழ்க்கை!

ஹர்பஜன் சிங் | கோப்புப்படம்

புதுடெல்லி: இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரும், பாஜி என்று அழைக்கப்படுவரான ஹர்பஜன் சிங் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று ட்விட்டரில் அறிவித்தார். 1998-ம் ஆண்டு இந்திய அணிக்குள் அறிமுகமான ஹர்பஜன் சிங் ஏறக்குறைய 23 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டோடு இணைபிரியாமல் பயணித்தார். அவரின் இந்த நீண்ட பயணம் இன்றுடன் முடிவுக்கு வந்தது.

ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்ட வீடியோ செய்தியில், “பல்வேறு வழிகளில் இருந்தும் ஏற்கெனவே நான் ஓய்வு பெற்றுவிட்டேன். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இருந்ததால்தான் தாமதமாக அறிவிக்கிறேன்.

உங்கள் வாழ்க்கையில் கடினமான முடிவு எடுத்து, முன்னேறிச்செல்லும தருணம் வரும். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த முடிவை அறிவிக்க இருந்தேன். ஆனால் அதற்கான சரியான தருணத்துக்காக உங்களுக்காக காத்திருந்தேன். நான் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்

ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ அனைத்து நல்ல விஷயங்களும் இன்றுடன் முடிவுக்கு வந்தது. என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் வழங்கிய கிரிக்கெட்டிலிருந்து இன்றுடன் ஓய்வு பெறுகிறேன், 23 ஆண்டு கால அழகான, நினைவில் நிற்கும் பயணத்தில் அனைவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் கடந்த 1998-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெங்களூரு டெஸ்டில் இந்திய அணியில் தனது 17 வயதில் அறிமுகமாகினார். ஒருநாள் போட்டியில் அதே ஆண்டில் ஏப்ரல் மாதம் ஷார்ஜாவில் நடந்த போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்பஜன் சிங் அறிமுகமாகினார். டி20 போட்டியில் 2006ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிரான டி20 தொடரில் முதல்முறையாக ஹர்பஜன் அறிமுகமாகினார்.

டெஸ்ட் போட்டிகளில் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய 4-வது இந்திய வீரர் என்ற பெயரெடுத்த ஹர்பஜன் சிங் 103 போட்டிகளில் 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 236 ஒருநாள் போட்டிகளில் ஆடிய பாஜி 269 விக்கெட்டுகளையும், 28 டி20 போட்டிகளில் ஆடி 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 2,224 ரன்களையும் அடித்துள்ளார்; இதில் 2 சதங்கள், 9 அரைசதங்கள் அடங்கும். ஒருநாள் போட்டியில் 1237 ரன்களை ஹர்பஜன் சேர்த்துள்ளார்.

பஞ்சாப் ரஞ்சிக் கோப்பை அணிக்கு கேப்டனாக இருந்துள்ள ஹர்பஜன் சிங், சாம்பியன்ஸ்லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் கேப்டனாக இருந்துள்ளார். இவரின் தலைமையில்தான் 2011 சாம்பியன்ஸ் லீக்கை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளில் ஹர்பஜன் விளையாடியுள்ளார்.

கடந்த 1998-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமாகினாலும் 2001-ம்ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்தான் ஹர்பஜன் சிங்கை நிமிர்ந்து பார்க்க வைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் 32 விக்கெட்டுகளை ஹர்பஜன் சிங் கைப்பற்றினார்.

2001-ம் ஆண்டு கும்ப்ளே காயத்தால் அவதிப்பட்டபோது, இந்திய அணியில் இருந்த சிறந்த சுழற்பந்துவீச்சாளராக ஹர்பஜன் இருந்தார். டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ஹர்பஜன் பெற்றார். 2001-ம் ஆண்டு ஹர்பஜன் சிங்கின் ஆட்டத்தைப் பார்த்த பஞ்சாப் அரசு இவருக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவி வழங்கியது.

2007-ம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் ஹர்பஜன் சிங் இடம் பெற்றிருந்தார்.

ஹர்பஜன் சிங் என்றாலே சர்ச்சை என்பதையும் மறக்க முடியாது. 2008-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸுடன் மோதலில் இனவெறியுடன் பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், தடையிலிருந்து ஹர்பஜன் சிங் தப்பித்தார். அதன்பின் ஐபிஎல் தொடரில் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறை ஐபிஎல் தொடர்முழுவதும் விளையாட ஹர்பஜன் சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x