

டி 20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 10 சுற்று வரும் 15ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலை யில் இந்த சுற்றில் இடம் பெற்றுள்ள பிரதான அணிகளுக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடை பெறும் ஆட்டத்தில் இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் அணி மோது கின்றன.
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் இந்திய அணி, ஆஸி., இலங்கை அணிகளுக்கு எதிரான தொடர் மற்றும் ஆசிய கோப்பையை வென்ற உற்சாகத்தில் உலக கோப்பை திருவிழாவில் களம் காண்கிறது. இந்த பயிற்சி ஆட்டம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு, முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அவர் முழு உடல் தகுதியை நிருபித்தால் மட்டுமே உலக கோப்பை தொடரில் கலந்து கொள்ள முடியும்.
முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் சுமார் ஓராண்டு காலம் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வில்லை. ஆஸி. தொடரில் இடம் பெற்ற அவர் தொடை பகுதியில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக கடைசி நேரத்தில் விலகினார். இன்றைய ஆட்டத்திலும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 12ம் தேதி நடைபெறும் ஆட்டத்திலும் பங்கேற்கும் முகமது ஷமி உடல் தகுதியை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இளம் வீரர்களான ஜஸ்ப்ரிட் பும்ரா, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, மூத்த பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா ஆகியோரால் டி 20 போட்டிகளில் இந்திய அணியின் பந்து வீச்சு பலம் பெற்றுள்ளது. பும்ரா, பாண்டியா ஆகியோர் இணைந்து 11 ஆட்டங்களில் 25 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். இதில் இந்தியா ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோல்வியை சந்தித்தது. ஆஸி., இலங்கைக்கு எதிரான இருதரப்பு தொடர் மற்றும் ஆசிய கோப்பையை இந்தியா வென்றுள்ளது.
பேட்டிங்கில் முன்வரிசையில் களமிறக்கப்பட்ட பாண்டியாவின் ஸ்டிரைக் ரேட் 147.61 ஆக உள்ளது. இன்றைய பயிற்சி ஆட்டமானது தொடர்ச்சியாக 3 தொடர்களை வென்ற இந்திய வீரர்களின் திறனை சொந்த மண்ணில் மீண்டும் பரிசோதித்துக்கொள்ள உதவும்.
2007ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி 11 ஆட்டங்களில் பங்கேற்று நல்ல பார்மில் உள்ளது. அதேவேளையில் 2012ல் சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் குறைந்த அளவிலான ஆட்டங்களிலேயே பங்கேற்றுள்ளது.
சர்வதேச அளவில் அந்த அணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக்கு எதிராக இரு ஆட்டங்களில் விளையாடியி ருந்தது. சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒருவார கால பயிற்சி முகாமில் ஜிம்பாப்வே, கவுண்டி கிளப் அணிகளுடன் மேற்கிந்திய தீவுகள் மோதி யுள்ளது.
அந்த அணியில் உள்ள வீரர்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ள டி 20 லீக் தொழில் முறை போட்டி களில் விளையாடி உள்ளனர். இதுதொடர்பாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் டேரன் சமி கூறும்போது,
‘‘எங்கள் அணியில் உள்ள 15 வீரர்களுமே வெற்றியை தேடித்தரக்கூடியவர்கள். ஓய்வறை யில் கெய்ல், பிராவோ, ஆந்த்ரே ரஸல் ஆகியோரை காணும்போது எனது வேலை எளிதாக அமைந்து விடும்’’ என்று தெரிவித்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கெய்ரோன் பொல்லார்டு, சுனில் நரேன், டேரன் பிராவோ, லென்டில் சிமன்ஸ் ஆகிய நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்தியத் தீவுகள் தனது இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் 13ம் தேதி ஆஸி. அணியை எதிர்கொள்கிறது. அதன்பின்னர் மும்பை புறப்படும் அந்த அணி சூப்பர் 10 சுற்றின் முதல் ஆட்டத்தில் 16ம் தேதி இங்கிலாந்தை சந்திக்கிறது.