மகளிர் டி 20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெற இந்தியா உட்பட 4 அணிகள் கடும் போட்டி

மகளிர் டி 20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெற இந்தியா உட்பட 4 அணிகள் கடும் போட்டி
Updated on
1 min read

மகளிர் டி 20 உலகக் கோப்பையில் பி பிரிவில் இருந்து அரையிறுதிக்கு தகுதி பெற 4 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாழ்வா, சாவா? என்ற சூழ்நிலையில் இந்திய அணி இன்று மேற்கிந்தியத் தீவுகளுடன் மோது கிறது.

இந்த ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு மொஹாலியில் நடைபெறுகிறது. அதேவேளையில் இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்ரீட்சை நடத்துகின்றன.

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி 3 ஆட்டங்களில் ஒரு வெற்றி, இரு தோல்விகளை பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்கு உடனடியாக முன்னேறும் வாய்ப்பை பெற முடியாது.

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையேயான ஆட்டத்தின் முடிவை பொறுத்தே இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு தெரியவரும். இங்கிலாந்து அணி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொண்டுள்ளது.

பாகிஸ்தான் 3 ஆட்டத்தில் விளையாடி இரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தால் மட்டுமே இந்தியா அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு உருவாகும். இந்திய அணி மேற்கிந்தியத்தீவுகள் அணியை வெல்லும் பட்சத்தில் 4 புள்ளிகள் பெறும்.

இந்த நிலைமை ஏற்பட்டால் மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறும் அணி தேர்வாகும்.

அதேவேளையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் 6 புள்ளிகள் பெறும். இதேபோல் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்றால் அந்த அணியும் 6 புள்ளிகள் பெறும். இந்த நிலை ஏற்பட்டால் இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். இதில் ரன் ரேட் அடிப்படையில் இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in