

டி 20 உலகக் கோப்பையில் சூப்பர் 10 சுற்று குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி இன்று தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
பாதுகாப்பை காரணம் காட்டி நீண்ட இழுபறிக்கு பின்னர் டி 20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. ஆசியக் கோப்பையில் இந்திய அணியிடம் மோசமாக அடைந்த தோல்வி ஒருபுறம் அமைய, கொல்கத்தா வந்திறங்கியதும், கேப்டன் அப்ரீடி, இந்திய ரசிகர்கள் தங்கள் அணி மீது செலுத்தும் அன்பை புகழ்ந்த விதம், முன்னாள் வீரர்களின் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
மேலும் இந்த விவகாரத்தில் அப்ரீடி தேசத்துரோகம் இழைத்து விட்டதாக மூத்த வக்கீல் ஒருவர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இன்றைய ஆட்டத்தில் ஆசிய கோப் பையில் அடைந்த தோல்விக்கு பாகிஸ்தான் அணி பழித்தீர்க்க முயற்சிக்கும். தொடரை வெற்றி யுடன் தொடங்கும் பட்சத்தில் அப்ரீடி தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
ஆசியக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய வங்க தேச அணி உலகக் கோப்பை முதல் சுற்று ஆட்டங்களில் சிறப்பான ஆட் டத்தை வெளிப்படுத்தியது. ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் ஓமன் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வங்க தேச தொடக்க வீரர் தமிம் இக்பால் அருமையாக விளையாடி சதம் அடித்தார். நல்ல பார்மில் உள்ள அவரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக் கூடும். ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல்ஹஸன் தனது கிரிக்கெட் வாழ்நாளில் சிறந்த பந்து வீச்சையும் பதிவு செய்தார். அவர் 25 ரன்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஷாகிப் அல்ஹஸன் விளையாடி உள்ளதால் அந்த அனுபவம் அவருக்கு உலகக் கோப் பையில் கைகொடுக்கக்கூடும். ஆசியக் கோப்பையில் தசைப் பிடிப்பு காரணமாக விலகிய இளம் வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஜூர் ரஹ்மான் இன்று களமிறங்குவது அணிக்கு கூடுதல் பலம்.
ஆசியக் கோப்பையில் பாகிஸ் தானுக்கு எதிரான ஆட்டத்தில் 48 ரன் சேர்த்து அணி வெற்றிபெற உதவிய மற்றொரு தொடக்க வீரரான சவுமியா சர்க்காரும் நல்ல பார்மில் உள்ளார்.
2009ல் சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் இம்முறை வேகப்பந்து வீச்சு பலத்துடன் களமிறங்குகிறது. மொகமது அமீர், மொகமது இர்பான், வஹாப் ரியாஸ் ஆகிய மூன்று இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறார்கள். பந்து வீச்சில் இருக்கும் வலுவானது பேட்டிங்கில் குறைந்தே காணப்படுகிறது.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப் படுத்தாதது பெரிய குறையாக உள்ளது. ஆசியக் கோப்பையை தவிர சர்வதேச அளவில் அதிக அளவிலான ஆட்டங்களில் பாகிஸ் தான் அணி கலந்துகொள்ள வில்லை. பிஎஸ்எல் டி 20 லீக்கில் கிடைத்த அனுபவம் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு தகுந்த பலனளிக்கவில்லை.
உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க தாமதமாக வந்ததால் சரியான வகையில் பயிற்சிகளும் கிடைக்கப்பெறவில்லை. எனினும் கிடைத்த ஒரு பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளது. இந்த ஆட்டத்தில் மொகமது ஹபீஸ் 70 ரன் எடுத்தது அணியின் பேட்டிங்குக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
ஷர்ஜீல்கான், ஷோயிப் மாலிக், அகமது ஷெஸாத், உமர் அக்மல் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுவதை வைத்தே அணி யின் முடிவு அமையும். அப்ரீடிக்கு இது கடைசி உலகக் கோப்பையாக இருக்கக்கூடும் என்பதால் அவர் பேட்டிங், பந்து வீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கக் கூடும்.
அணி விவரம்:
வங்கதேசம்:
மோர்டசா (கேப்டன்), அரபாத் சன்னி, மஹ்மதுல்லா, சவுமியா சர்க்கார், முஷ்பிகுர் ரஹிம், சபீர் ரஹ்மான், அபு ஹைதர், நுருல் ஹசன், அல்-அமின் ஹொசைன், நசீர் ஹொசைன், ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால், தஸ்கின், அஹ்மத், மிதுன், முஸ்டாபிஜூர் ரஹ்மான்.
பாகிஸ்தான்:
அப்ரீடி (கேப்டன்),
மொகமது ஹபீஸ், ஷோயிப் மாலிக், மொகமது இர்பான், ஷர்ஜீல் கான், வஹாப் ரியாஸ், முகமது நவாஸ், முகம்மது சமி, காலித் லத்தீப், மொகமது அமீர், உமர் அக்மல், சர்ப்ராஸ் அகமது, இமாத் வாசிம், அன்வர் அலி, குர்ராம் மன்சூர்.
நேரம்: பிற்பகல் 3
இடம்: கொல்கத்தா
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.