

டாக்கா: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கித் தொடரின் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை இந்தியா வென்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.
வங்கதேசத்தின் டாக்கா நகரில் ஆசியன் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடந்து வருகிறது. இதில் அரையிறுதி சுற்றில் ஜாப்பானிடம் இந்திய அணி 5 -3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. மற்றுமொரு அரையிறுதியில் தென்கொரியாவிடம் பாகிஸ்தான் 5 -6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதையடுத்து, இன்று நடந்த மூன்றாம் இடத்துக்கான (வெண்கல பதக்கம்) போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
மிகுந்த பரப்பரப்பாக நடந்த இப்போட்டியில், முதல் கோலை இந்தியா அடிக்க, அதனைத் தொடர்ந்து இரண்டு கோல்கள் அடித்து பாகிஸ்தான் முன்னிலை பெற்றது. இருப்பினும் இந்திய வீரர்கள் வருண்குமார், ஆகாஷ் தீப் சிங் ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு கடைசி 8 நிமிடத்தில் முன்னிலையை பெற்று தந்தனர்.
இதன்மூலம், பாகிஸ்தானை 4- 3 என்ற கோல்கள் கணக்கில் இந்திய அணி வீழ்த்தி, ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மூன்றாவது இடத்தை பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றது.