

லாகூர்: "பாபர் ஆஸம், முகமது ரிஸ்வானைப் பார்த்து இதுபோல் நம்மிடம் வீரர்கள் இல்லையே என இந்தியர்கள் இனிமேல் ஆதங்கப்படுவார்கள்" என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் சீண்டியுள்ளார்.
மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் ரிஸ்வான் 87 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ரிஸ்வான் 45 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார். அதுமட்டுமல்லாமல் இந்த காலண்டர் ஆண்டில் டி20 போட்டிகளில் 2,000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும முகமது ரிஸ்வான் பெற்றார்.
பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களான பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான் இருவரும் இந்திய அணியின் விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு இணையாக பார்க்கப்படுகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப், பிடிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், “கடந்த ஓர் ஆண்டுக்கு முன், நாங்கள் அனைவரும், விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் போன்று எங்கள் டி20 அணியில் வீரர்கள் இல்லையே என்று பேசினோம்.
ஆனால், பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான் பேட்டிங்கைப் பார்த்தபின், இனிமேல் இந்தியர்கள் பாபர் ஆஸம் போன்று, முகமது ரிஸ்வான் போன்று இந்திய அணியில் வீரர்கள் இல்லையே என ஆதங்கப்படுவார்கள்.
இரு வீரர்களுமே தங்களின் ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்தியுள்ளனர். இருவரும் ஸ்கோர் செய்வது பற்றித்தான் கவனம் செலுத்தக் கோரினோம், ஆனால் இருவரும் தங்களின் இன்னிங்ஸை தற்போது சிறப்பாகக் கொண்டு செல்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.