Published : 19 Dec 2021 03:33 PM
Last Updated : 19 Dec 2021 03:33 PM

20 வயதில் பக்குவம் தந்த வெற்றி: இந்திய பேட்மிண்டன் வரலாற்றில் லக்‌ஷயா சென் சாதனை!

இந்திய பேட்மிண்டன் வரலாற்றில் இளம் வயதில் (20) உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற வீரர் என்ற சாதனை படைத்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் லக்‌ஷ்யா சென். இவர் தனது 12-ஆவது வயதில் முதல் சாம்பியன் பட்டம் வென்ற இவர் கடந்து வந்த அசாத்திய சாதனைப் பயணம் குறித்து பார்ப்போம்.

விளையும் பயிர்: விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதுபோல், லக்‌ஷ்யா சென்னின் நாடி நரம்பெல்லாம் பேட்மிண்டன் ஊறிப்போய் உள்ளது. சென்னின் தந்தை டி.கே.சென், இந்திய பேட்மிண்டன் பயிற்சியாளர்களில் மிகவும் முக்கியமானவர். லக்‌ஷ்யா சென்னின் சகோதரர் சிராங் சென்னும் சர்வதேச விளையாட்டுகளில் முத்திரைப் பதித்த பேட்மிண்டன் வீரர். பேட்மிண்டன் குடும்பப் பின்னணியிலேயே இருக்க 9 வயதாக இருக்கும்போதே லக்‌ஷ்யா தனது விருப்பத்தைத் தந்தையிடம் தெரிவித்துள்ளார். அவர் 9 வயதாக இருந்தபோது யூனியன் வங்கி நடத்திய ஆல் இந்தியா சப் ஜூனியர் ரேங்கிங் பேட்மிண்டன் போட்டியில் அவரது சகோதரர் பங்கேற்க அதைப் பார்க்க தந்தையை நச்சரித்து அவருடன் சென்றார். அந்தப் போட்டிக்குப் பின்னர் நேஷனல் சாம்பியன் விமல் குமாரை தந்தையும், மகன்களும் சந்தித்தனர். அப்போது அவரிடம் லக்‌ஷ்யா சென் தனது பேட்மிண்டன் வேட்கையைத் தெரிவித்தார். அங்கு தொடங்கியது லக்‌ஷ்யா சென்னின் பயணம்.

விளையாட்டு தந்த பக்குவம்: விமல் பரிந்துரைக்க ஒருவழியாக பிரகாஷ் படுகோனே பேட்மிண்டன் அகாடமியில் சேர்ந்தார் லக்‌ஷ்யா சென். ஆடுகளத்தில் லக்‌ஷ்யா சென் காட்டிய துள்ளலும், வேகமும், அவருக்குள் இருந்த வெற்றியின் தாகத்தை பயிற்சியாளர் பிரகாஷ் படுகோனேவுக்குக் காட்டிக் கொடுத்தது. அவரை வளர்த்தெடுக்க ஆரம்பித்தார். ஆனால், ஆரம்ப காலத்தில் ஒரு போட்டியில் தோற்றுவிட்டாலும் கூட சென் ஒதுங்கி அழும் சிறுவனாக இருந்துள்ளார். பின்னர், ஆடுகளும், ஆட்டமும் அவருக்கு பக்குவத்தைக் கொடுத்துள்ளது.

அரையிறுதிக்கு தகுதி பெற்ற இளம் வீரர்: பக்குவமடைந்த, தேர்ந்த வீரரானார் லக்‌ஷ்யா சென். கடந்த 2017-ஆம் ஆண்டு உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி (BWF World Championships) அரையிறுதிக்கு தகுதி பெற்ற இளம் வீரர் என்ற அந்தஸ்தை லக்‌ஷ்யா சென் பெற்றார். அப்போது அவருக்கு வயது 15. தனது பயிற்சியாளர் பிரகாஷ் படுகோனே 16-வது வயதில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடி செய்திருந்த சாதனையை லக்‌ஷ்யா சென் முறியடித்தார். பின்னர், 2018-ஆம் ஆண்டு இளைஞர்கள் ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில், இப்போது நடந்து வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் (BWF World Championships) அரையிறுதியில் பங்கேற்று சக இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்திடம் தோல்வியுற்று வெண்கலத்தைக் கைப்பற்றியுள்ளார். தோல்வியுற்றிருந்தாலும் கூட இந்திய பேட்மிண்டன் வரலாற்றில் இளம் வயதில் சர்வதேசப் போட்டியில் வெண்கலம் வென்ற வீரர் என்ற சாதனை படைத்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் லக்‌ஷ்யா சென். 20 வயதில் லக்‌ஷ்யா சென் இந்திய பேட்மிண்டன் எதிர்காலக் கனவுகளுக்கு நல்ல விருந்து படைப்பவராக உறுதியாக வளர்ந்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியிலேயே இந்தியாவின் நம்பிக்கையாக இருந்து வந்தார். ஆனால், கோவிட் பாதிப்பு காரணமாக, ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல் போனது. இந்த நிலையில், இப்போது உலக சாம்பியன்ஷிப் மூலம் நிரூபித்திருப்பது கவனத்துக்குரியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x