

பெங்களூருவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த வங்கதேசம் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.
டாஸ் வென்ற ஸ்மித் முதலில் வங்கதேசத்தை பேட் செய்ய அழைத்தார். ஜோஷ் ஹேசில்வுட், ஏரோன் பிஞ்ச் உட்கார வைக்கப்பட்டதன் சர்ச்சை இன்றும் தொடர்கிறது. ஆஷ்டன் ஆகருக்குப் பதிலாக ஹேஸ்டிங்ஸ் அணிக்குள் எடுக்கப்பட்டார். ஆனால் அதனாலும் பயனில்லை அவர் 3 ஓவர்களில் 24 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
கடைசி 3 ஓவர்களில் ஆஸ்திரேலிய பந்து வீச்சை உரித்தெடுத்த மஹமுதுல்லாவினால் வங்கதேசம் 44 ரன்கள் குவித்தது. மஹமுதுல்லாவும், முஷ்பிகுர் ரஹிமும் இணைந்து 28 பந்துகளில் 51 ரன்களை 6-வது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் சேர்த்தனர். இதனால் 20 ஓவர்களில் 156 ரன்கள் என்ற ஓரளவுக்கு சவாலான இலக்கை வங்கதேசம் எட்டியது.
மஹமுதுல்லா 29 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்தும் முஷ்பிகுர் ரஹிம் 15 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர்.
16-வது ஓவரும் 17-வது ஓவரும் சிக்கனமாக அமைய ஸ்கோர் 17-வது ஓவர் முடிவில் 112/5 என்று இருந்தது. 18-வது ஓவரை பாக்னர் வீச வந்தார். அப்போது மஹமுதுல்லா ஆஃப் திசையில் இரண்டு அற்புதமான பவுண்டரிகளை அடித்தார். முஷ்பிகுர் ரஹிம் ஸ்கொயர் லெக்கில் ஒரு பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் 15 ரன்கள் வந்தது. 19-வது ஓவரை வாட்சன் வீச முதல் பந்தே பவுண்டரி சென்றிருக்க வேண்டியது ஆனால் டீப் பாயிண்டில் ஆடம் ஸாம்பா அருமையாக டைவ் அடித்து 2 ரன்களாகக் குறைத்தார். அடுத்த பந்து வைடு, அதற்கு அடுத்த பந்து மீண்டும் பாயிண்ட் திசை இடைவெளியை பயன்படுத்தி மஹமுதுல்லா அருமையாக பவுண்டரி அடித்தார்.
முஷ்பிகுர் அதே பாயிண்டில் ஒரு பவுண்டரி அடித்தார். தேர்ட்மேன், பாயிண்ட் இரண்டுமே ஸ்மித்தினால் தவறாக சர்க்கிளுக்குள் கொண்டு வரப்பட்டதால் இந்த பவுண்டரிகள் வந்தது, மஹமுதுல்லா அருமையாக அதனைப் பயன்படுத்திக் கொண்டார். வாட்சன் ஓவரில் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் வந்தது. கடைசி ஓவரி கூல்டர் நைல் வீசினார். லாங் ஆஃபில் ஒரு விளாசல் பவுண்டரி அடித்த மஹமுதுல்லா அடுத்த பந்தை டீப் மிட்விக்கெட்டில் விளாசி இன்னொரு பவுண்டரி அடித்தார், அவரை ஆஸி.யினால் நிறுத்த முடியவில்லை. கடைசி ஓவரில் 12 ரன்கள், மொத்தமாக கடைசி 3 ஓவர்களில் 44 ரன்கள், ஆனால் அவர் அரைசதம் அடிக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டமே.
ஆஸ்திரேலிய அணியில் லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா 3 விக்கெட்டுகளை 23 ரன்களுக்குக் கைப்பற்றி சிறந்த பவுலராக விளங்கினார். வாட்சன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தொடக்கத்தில் சிக்கனம் காட்டினாலும் கடைசியில் அடி வாங்கி 4 ஓவர்களில் 31 ரன்களை விட்டுக் கொடுத்தார். கூல்ட்டர் நைல் கடைசி ஓவரில் 12 ரன்களையும் சேர்த்து 4 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்தார்.
முன்னதாக, வங்கதேச அணியில் தொடக்கத்தில் சவுமியா சர்க்கார் 1 ரன் எடுத்து வாட்சனின் வைடு பந்தை பாயிண்டில் எளிதான கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
மொகமது மிதுன் என்ற மற்றொரு தொடக்க வீரரும் கவலைப்படாமல் ஆடினார். அவர் 22 பந்துகளில் 1 பவுண்டரி ஒரு சிக்சருடன் 23 ரன்கள் எடுத்து ஸாம்பாவின் முதல் விக்கெட்டானார். சபீர் ரஹ்மான் வழக்கம் போல் இரண்டு அருமையான பவுண்டரியுடன் தொடங்கி 12 ரன்கள் எடுத்த நிலையில் வாட்சனிடம் வீழ்ந்தார்.
ஷாகிப் அல் ஹசன் இடைப்பட்ட ஓவர்களில் ரன் விகிதத்தை ஓரளவுக்கு கவனித்துக் கொண்டார். அவர் மேக்ஸ்வெல்லை ஒரே ஓவரில் சிக்ஸ், பவுண்டரி உட்பட 12 ரன்கள் விளாச மேக்ஸ்வெல் ஓவர் கட் செய்யப்பட்டது. 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 33 ரன்கள் எடுத்து ஷாகிப் அல் ஹசன், ஸாம்பாவின் 3-வது விக்கெட்டாக வீழ்ந்தார். இடையில் ஷுவகத ஹோம் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 13 ரன்களுக்கு நன்றாக ஆடி ஸாம்பாவின் 2-வது விக்கெட்டாக வீழ்ந்தார்.
ஷாகிப் அவுட் ஆகும் போது வங்கதேசம் 15.2 ஓவர்களில் 105/5 என்று இருந்தது. கடைசி 3 ஓவர்களில் மஹமுதுல்லாவின் ஆட்டத்தினால் 44 ரன்கள் விளாசபட்டது.
157 ரன்கள் இலக்கை எதிர்த்து வாட்சனும், கவாஜாவும் ஆடி வருகின்றனர். மஷ்ரபே மோர்டசாவின் முதல் ஓவரிலேயே கவாஜா மிக அழகாக நேராக ஒரு சிக்ஸ் அடிக்க ஆஸ்திரேலியா 8/0 என்று ஆடி வருகிறது, பெங்களூரு பிட்ச் எப்பவும் இலக்கைத் துரத்த சாதகமானதே.