

டி20 கிரிக்கெட்டில் சமீபத்திய தொடர் வெற்றிகளினால் உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே சாதக சூழ்நிலைகள் உள்ளன என்று கூறப்படுவதற்கிணங்க அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி, வெற்றி பெறும் நல்ல பழக்கம் தொடர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
நமது அணி ஏதோ சில தனி நபர்களின் அணி மட்டுமல்ல, நாங்கள் இந்திய கிரிக்கெட் அணி, எனவே ஒரு பெரிய கிரிக்கெட் தொடரை வெல்ல 7 அல்லது 8 வீர்ர்கள் சீராக தொடர்ந்து சிறப்பாக ஆடுவது அவசியம்.
ஒவ்வொரு ஆட்டமும் மிக முக்கியம், பயிற்சி ஆட்டங்களையுமே சீரியசாகவே ஆட வேண்டும். தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் வெற்றி பெறும் நல்ல பழக்கத்தை பெற்றுள்ளோம், எனவே வெற்றியைத் தொடர்வது அவசியம்.
பெரிய இலக்கை நோக்கிச் செல்கையில் ஒரு சில இடைஞ்சல்கள் ஏற்படலாம் ஆனால் நாம் ஒரு மட்டத்தில் சீரான தன்மையை விட்டு விடக்கூடாது. ஒவ்வொரு போட்டியையும் முக்கியமான போட்டியாக கருத வேண்டும்.
இப்போதைய அணியில் விராட் கோலி சிறப்பான பார்மில் உள்ளார். அதே போல்தான் ரோஹித் சர்மாவும். பின்வரிசையில் தோனி மீண்டும் தனது அதிரடி வழிக்குத் திரும்பியுள்ளார். யுவராஜ், ஷிகர் என்று அனைவரும் தங்களுக்கான தருணங்களை பெற்றுள்ளனர்.
இளமையும் அனுபவமும் கலந்த சமபலமான அணியாகும் இது.
இவ்வாறு கூறினார் ரவி சாஸ்திரி.