Last Updated : 11 Dec, 2021 11:57 AM

 

Published : 11 Dec 2021 11:57 AM
Last Updated : 11 Dec 2021 11:57 AM

ஆஷஸ் தொடர்; 35 ஆண்டுகால வரலாற்றை தக்கவைத்தது ஆஸி. ; நாதன் புதிய மைல்கல்: முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஆஸி.வீரர்கள் லாபுஷேன், ஹாரிஸ் | படம் உதவி: ட்விட்டர்.

பிரிஸ்பேன்

பிரிஸ்பேனில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லேயன் 400-வது டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றி புதிய மைல்கல்லை எட்டினார். 5 நாட்கள் நடைபெற வேண்டிய டெஸ்ட் போட்டி 4-வது நாளிலேயே முடிவுக்கு வந்துள்ளது. ஆட்டநாயகன் விருது டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது.

கடந்த 1986-ம் ஆண்டுக்குப் பின் காபா மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் வெற்றியை இங்கிலாந்து அணி பெறவில்லை எனும் வரலாறு தொடர்கிறது. அதாவது 35 ஆண்டுகளாக காபா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணியால் வெல்ல முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் கடந்த 10 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் வெற்றியை இங்கிலாந்து ருசிக்கவில்லை. கடைசியாக 2010-11ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி வென்றிருந்தது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஒரு டெஸ்ட்டில் ஒரு வெற்றி என 100 சதவீதத்துடன் 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் ஆஸ்திரேலிய அணி இருக்கிறது.

223 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஆட்டத்தை சுவாரஸ்யமாக வைத்திருந்த இங்கிலாந்து அணி அடுத்த 74 ரன்களுக்குள் மீதமிருந்த 8 விக்கெட்டுகளையும் இழந்து வெற்றியைத் தாரை வார்த்தது. ஒருவேளை இன்றைய 4-வது நாள் முழுவதும் இங்கிலாந்து வீரர்கள் பேட் செய்து 200 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருந்தால் நாளை கடைசி நாள் ஆட்டம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியிருக்கும். ஆனால், எதற்கும் வழியில்லாமல் 4-வது நாளிலேயே ஆட்டம் முடிந்தது.

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தால் ஆஸ்திரேலிய அணிக்கு 20 ரன்கள் மட்டுமே இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஒரு விக்கெட்டை மட்டும் இழந்த ஆஸ்திரேலிய அணி எளிதாக இலக்கை அடைந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருக்கிறது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் கம்மின்ஸ் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 147 ரன்களில் ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட்டின் (152) சதம், வார்னர் (94), லாபுஷேன் (74) ஆகியோரின் ஆட்டத்தால் 425 ரன்களுக்கு ஆட்டமிழந்து 278 ரன்கள் முன்னிலை பெற்றது.

​இதையடுத்து, 2-வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இங்கிலாந்து அணி விரைவாக முதல் இரு விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் ஜோ ரூட் (86), டேவிட் மலான் (80) ரன்களில் ஆட்டமிழக்காமல் போராடி வருகிறார். 3-வது நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் சேர்த்திருந்தது. 58 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இருந்தது.

கேப்டன் ஜோ ரூட் (86), டேவிட் மலான் (80) ரன்களில் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர். டேவிட் மலான் 83 ரன்களில் லேயன் பந்துவீச்சில் கால்காப்பு, பேட்டில் பந்து பட்டு லாபுஷேனிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். மலான் விக்கெட்டை வீழ்த்தியபோது டெஸ்ட் அரங்கில் தனது 400-வது விக்கெட்டை லேயன் எடுத்தார். சர்வதேச அளவில் 400 விக்கெட்டுகளை எட்டிய, 17-வது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை லேயன் பெற்றார்.

கடந்த ஜனவரி மாதம் 399-வது விக்கெட்டை வீழ்த்திய லேயன் 400-வது விக்கெட்டை வீழ்த்த ஏறக்குறைய 11 மாதங்கள் காத்திருந்துள்ளார். இந்த 11 மாத இடைவெளியில் ஆஸ்திரேலிய அணியும் எந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை.

அதைத் தொடர்ந்து, ரூட் 89 ரன்னில் கேமரூன் கிரீன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இருவரும் இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் பேட் செய்த நிலையில் கேப்டன் ரூட், மலான் ஆட்டமிழந்ததுதான் ஆஸ்திரேலிய அணிக்குத் திருப்புமுனையாக அமைந்தது.

அதன்பின் களமிறங்கிய நடுவரிசை பேட்ஸ்மேன்கள், கீழ்வரிசை பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைக்கவில்லை. இங்கிலாந்து அணியில் 9-வது வீரர் வரை நன்கு பேட்டிங் செய்யக்கூடியவராக இருந்தபோதிலும் நாதன் லேயன் சுழற்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.

ஒலே போப் (4) ரன்னில் லேயன் பந்துவீச்சில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (14) ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் கிரீனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஜாஸ் பட்லர் (23), கிறிஸ் வோக்ஸ் (16), ராபின்ஸன் (8), மார்க்வுட் (6) என சீரான இடைவெளியில் லேயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்து 20 ரன்கள் இலக்காக ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்தது. ஆஸ்திரேலிய அணித் தரப்பில் லேயன் 4 விக்கெட்டுகளையும், கேமரூன் க்ரீன், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

20 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அலெக்ஸ் கேரே 9 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹாரிஸ் 9 ரன்னிலும், லாபுஷேன் ரன் ஏதும் சேர்க்காமல் இருந்து அணியை 5.1 ஓவர்களில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

அடுத்த டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் வரும் வியாழக்கிழமை பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்க உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x