ஆஷஸ் முதல் டெஸ்ட்டில் 5-வது நாளுக்காகக் காத்திருக்கிறேன்: அஸ்வின் உற்சாகம்

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட் செய்த காட்சி | படம் உதவி: ட்விட்டர்.
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட் செய்த காட்சி | படம் உதவி: ட்விட்டர்.
Updated on
2 min read

பிரிஸ்பேன் நகரின் காபா மைதானத்தில் நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 5-வது நாள் நடக்கும் பரபரப்புக்காகக் காத்திருக்கிறேன் என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் காபாவில் தொடங்கி நடந்து வருகிறது. முதல் ஆட்டமே இரு அணிகளுக்கும் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் கம்மின்ஸ் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 147 ரன்களில் ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட்டின் (152) சதம், வார்னர் (94), லாபுஷேன் (74) ஆகியோரின் ஆட்டத்தால் 425 ரன்களுக்கு ஆட்டமிழந்து 278 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து, 2-வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இங்கிலாந்து அணி விரைவாக முதல் இரு விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் ஜோ ரூட் (86) டேவிட் மலான் (80) ரன்களில் ஆட்டமிழக்காமல் போராடி வருகிறார். 58 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து விளையாடி வருகிறது.

நாளை காலை நேர செஷனை மட்டும் இங்கிலாந்து அணி சமாளித்து ஆடிவிட்டால் அதன்பின் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்துவிடும். அதே நேரம் நாளை இங்கிலாந்து அணியை ஆட்டமிழக்கச் செய்தால்தான் கடைசி நாளில் குறைந்த இலக்கை எளிதாக வெல்ல முடியும் என்ற கணிப்பில் ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களும் நாளை காலை செஷனில் ஆக்ரோஷமாகப் பந்துவீசுவார்கள். ஆதலால் நாளை காலை செஷனும், கடைசி நாள் ஆட்டமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைக் குறிப்பிட்டு இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “காபாவில் அனைத்தும் நடக்கும். அதிலும் நாளை காலை முதல் செஷனை இங்கிலாந்து கடந்துவிட்டால் 5-வது நாளில் மிகப்பெரிதாக நடக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

காலண்டர் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிகமான ரன்கள் அடித்த இங்கிலாந்து கேப்டன் என்ற வரிசையில் மைக்கேல் வானின் சாதனையை ஜோ ரூட் முறியடித்துவிட்டார். கடந்த 2002-ல் மைக்கேல் வான் 1481 ரன்கள் சேர்த்தார். கடந்த 2018-ம் ஆண்டில் 1477 ரன்கள் சேர்த்த ரூட் கடைசியில் அதை முறியடிக்க முடியாமல் போனது. ஆனால், ரூட் இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட்டில் 2-வது இன்னிங்ஸில் அரை சதம் அடித்ததன் மூலம் காலண்டர் ஆண்டில் மைக்கேல் வானின் சாதனையைக் கடந்துவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in