Last Updated : 10 Dec, 2021 07:42 AM

 

Published : 10 Dec 2021 07:42 AM
Last Updated : 10 Dec 2021 07:42 AM

விராட் கோலி ஏன் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்? பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மனம் திறப்பு

விராட் கோலி | கோப்புப்படம்

புதுடெல்லி


இந்திய அணியின் ஒருநாள்போட்டிக்கான கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி ஏன் நீக்கப்பட்டார், ரோஹித் சர்மா ஏன் டி20,ஒருநாள் போட்டிக்கு முழுநேரக் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பதற்கான விளக்கத்தை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அளித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார், டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாகவிராட் கோலி இருப்பார் என்று சாதாரணமான அறிவிப்பை பிசிசிஐ தேர்வுக்குழு வெளியி்ட்டு கடந்து சென்றது

ஆனால், கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் அணிக்கு கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டதிலிருந்தும் சரி, அதன்பின் டி20, ஒருநாள் அணிக்கு கேப்டனாக கோலி நியமிக்கப்பட்டதிலிருந்தும் தன்னுடைய பணியை சிறப்பாகச் செய்துள்ளார். ஒரு கேப்டனாக, பேட்ஸ்மேனாக கோலியின் பங்களிப்பு அளப்பரியது. அளவுக்கும் அதிகமானது.

ஆனால், ஐசிசி சார்பில் எந்தவிதமான கோப்பையையும் கோலி தலைமையில் இந்திய வாங்கவில்லை என்பதே பெரிய விமர்சனமாக வைக்கப்பட்டது. இருந்தபோதிலும், 2019ம் ஆண்டு உலககக் கோப்பைப் போட்டிக்கு அரையிறுதிவரை அணியை கோலி தலைமை அழைத்துச் சென்றது, சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப்போட்டிவரை சென்று பாகிஸ்தானிடம் தோற்றது.

இந்த அழுத்தம், இந்தியக் கிரிக்கெட்டையும் தாண்டி ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு கேப்டனாக இருந்து ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியவில்லையே என்ற விமர்சனமும் சேர்ந்து கோலிக்கு கூடுதலாகவே நெருக்கடியைக் கொடுத்தது.

இதனால் வேறுவழியின்றி டி20 உலகக் கோப்பை முடிந்தபின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்தார். ஆனால், ஒருநாள் அணியின் கேப்டனாக கோலி தொடர்வார் என எதி்ர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென பிசிசிஐ கோலியை நீக்கி வெளியிட்ட அறிவிப்பு பல்வேறு ஊகங்களை எழுப்பியது.

இந்திய அணிக்கு இதுவரை கேப்டன் பொறுப்பேற்ற அனைத்து கேப்டன்களையும்விட கோலியின் தலைமை சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறது. ஒருநாள் போட்டிக் கேப்டனாக கோலியின் வெற்றி சராசரி 70.43 சதவீதம். 95 ஒருநாள் போட்டிகளுக்கு தலைமை ஏற்ற கோலி 27 தோல்விகளையும், 65 ெவற்றிகளையும் ஈட்டியுள்ளார்.

இந்திய அணி கோலி தலைமையி்ல 19 பைலேட்டரல் சீரிஸில் 4 மட்டுமே இழந்திருக்கிறது, 15 தொடர்களை வென்றுள்ளது. உள்நாட்டில் 9 தொடர்களில் விளையாடி ஒரு தொடரை மட்டுமே இழந்தது இந்திய அணி.
கோலியின் தலைமையி்ல் இந்திய அணி இருதரப்பு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் தொடரை வென்றுள்ளது.

கேப்டனா மட்டுமல்லாமல் பேட்ஸ்மேனாகவும் கோலியை குறைகூற முடியாது. 95 போட்டிகளில் கோலியின் சராசரி 72.65 வைத்துள்ளார்.இதுவரை எந்த கேப்டனும் வைத்திராத சராசரியாகும். கேப்டனாக இருந்தபோதுதான் கோலி 21 சதங்களை விளாசி, ஏறக்குறைய 5ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இதில் ரி்க்கி பாண்டிங் மட்டும்தான் கேப்டனாக22 சதங்கள் அடித்துள்ளார். அவருக்கு அடுத்தார்போல் கோலி மட்டுமே உள்ளார்.

சாதனைகளிலும், பேட்டிங்கிலும், கேப்டன்ஷி திறமையிலும் சிறப்பாகச் செயல்பட்ட கோலி ஏன் திடீெரன நீக்கப்பட்டார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதற்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்திய அணிக்கு ஒருநாள், டி20 கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமிப்பது என்ற முடிவை பிசிசிஐ, தேர்வுக்குழுவினர் சேர்ந்துதான் எடுத்தோம். உண்மையில் என்ன நடந்ததென்றால், விராட் கோலியிடம் பிசிசிஐ தனிப்பட்ட முறையில் பேசி, டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தது. ஆனால் பலமுறை பேசியும் விராட் கோலி பிடிவாதமாக இருந்து அதை கோரிக்கை ஏற்க மறுத்து பதவிலியிருந்து விலகினார்.

ஆனால், டி20 போட்டி, ஒருநாள் போட்டிக்கு என இரு தனித்தனி கேப்டன் இருப்பது சரியானது அல்ல என்று தேர்வுக்குழுவினர் பிசிசியிடம் கருத்துத் தெரிவித்தனர்.

ஆதலால், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக நீடிக்கட்டும், ரோஹித் சர்மா ஒருநாள், டி20 போட்டிகளுக்கு கேப்டனாக வரட்டும் என்று முடிவு செய்தோம். பிசிசிஐ தலைவர் என்ற முறையில் விராட் கோலியிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன், தேர்வுக்குழுத் தலைவரும் கோலியிடம் பேசினார்.

ரோஹித் சர்மாவின் தலைமைப் பண்புகள் மீது நம்பிக்கையிருக்கிறது. டெஸ்ட் கேப்டனாக கோலி தொடர்வார். நல்லகரங்களில் இந்திய கிரிக்கெட்டை ஒப்படைத்திருக்கிறோம் என்று பிசிசிஐ நம்புகிறது. இந்திய ஒருநாள், டி20 அணிக்கு விராட் கோலி அளித்த பங்களிப்புக்கு பிசிசிஐ நன்றி கூறுகிறது”
இவ்வாறு கங்குலி தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x