Published : 08 Dec 2021 11:19 AM
Last Updated : 08 Dec 2021 11:19 AM

இசாந்துக்கு இடமிருக்கா, ரஹானேவின் பதவிப் பறிப்பு? தெ. ஆப்பிரிக்கத் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு: யாருக்கெல்லாம் வாய்ப்பு?

அஜின்கயே ரஹானே | கோப்புப்படம்

புதுடெல்லி

தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடருக்காகச் செல்லும் இந்திய அணி இன்று தேர்வு செய்யப்படுகிறது. ஃபார்மில்லாத ரஹானேவின் துணை கேப்டன் பதவி பறிக்கப்படலாம். உடற்தகுதியில்லாத இசாந்த் சர்மா நீக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இங்கிலாந்து தொடரிலிருந்து ஃபார்மில் இல்லாமல் தடுமாறும் ரஹானேவுக்கு தென் ஆப்பிரிக்கத் தொடர் கடைசி வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை பயணத்தில் தென் ஆப்பிரிக்காவில் ரஹானே சிறப்பாக விளையாடியதால் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம். அதேபோல புஜாராவுக்கும் இது கடைசி வாய்ப்பாக இருக்கலாம்.

ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக வரும் 17-ம் தேதி தொடங்க இருந்த முதல் டெஸ்ட் பாக்ஸிங்டே இம்மாதம் 26-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக வரும் 17-ம் தேதி இந்திய அணி தென் ஆப்பிரிக்கா புறப்படுகிறது. ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்கும் இந்திய அணி, டி20 தொடர் குறித்து இரு அணி வாரியங்களும் பின்னர் முடிவு செய்வதாகத் தெரிவித்துள்ளன.

இந்திய ஏ அணி வீரர்கள் ஏற்கெனவே தென் ஆப்பிரிக்காவில் விளையாடி வருவதால், அதில் சில வீரர்கள் தக்கவைக்கப்படலாம் எனத் தெரிகிறது. குறிப்பாக பிரியங்க் பஞ்சால், அபிமன்பு ஈஸ்வரன், இஷான் கிஷன், ஹனுமா விஹாரி ஆகியோர் தக்கவைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து ரஹானேவின் பேட்டிங் ஃபார்ம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு கதையாகவே இருந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் அடிலெய்டில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்தப் போட்டியில் ரஹானே இரு இன்னிங்ஸ்களில் 42, 0 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ரஹானே சதம் (112, 27), சிட்னியில் நடந்த போட்டியில் (22, 4), காபா நடந்த டெஸ்ட்டில் ரஹானே 37, 24 என சொல்லிக்கொள்ளும் வகையில் ரன்கள் அடிக்கவில்லை. ஒரே ஒரு சதத்தை மட்டும் அடித்து அணியில் ஒட்டிக்கொண்டார்.

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரிலும் ரஹானே சொதப்பலாக பேட்டிங் செய்தார். சென்னையில் நடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் ரஹானே முதல் டெஸ்ட்டில் (1,0), 2-வது டெஸ்ட்டில் (67, 10) என அடித்தார்.

அகமதாபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் (7 ரன்கள்) 4-வது டெஸ்ட்டில் 27 ரன்கள் மட்டுமே ரஹானே சேர்த்தார்.

இங்கிலாந்து பயணத்தில் டெஸ்ட் போட்டிகளிலும் ரஹானே லாட்ஸில் நடந்த ஒரு போட்டியில் மட்டுமே அரை சதம் அடித்தார். மற்ற டெஸ்ட் போட்டிகளில் 20 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை.

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் (35, 4) என ரஹானே கோட்டைவிட்டார். ரஹானே கடந்த 25 இன்னிங்ஸ்களில் 2 அரை சதம், ஒரு சதம் மட்டுமே அடுத்துள்ளார். மற்ற இன்னிங்ஸ்களில் எல்லாம் சராசரியாக 20 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை. ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து டெஸ்ட் போட்டியில் ரஹானே அதிர்ஷ்டத்தில் ஒட்டிக்கொண்டு வருகிறார்.

ஆதலால் ரஹானேவுக்கு தென் ஆப்பிரிக்கத் தொடரில் வழங்கப்படும் கடைசி வாய்ப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. ஆனால், துணை கேப்டன் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டால் ரோஹித் சர்மாவிடம் வழங்கப்படலாம்.

வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவிட்டார். ஆனால், உடற்தகுதியோடு டெஸ்ட் போட்டிக்குள் வந்தாலும், திடீெரன காயத்தால் காணாமல் போய்விடுகிறார். ஆதலால், இந்திய அணியில் வீரர்களுக்கு உடற்தகுதி பிரதானமாகப் பார்க்கப்படுவதால் இசாந்த் சர்மா நீக்கப்படலாம்.

அவருக்கு பதிலாக இளம் வீரர்கள் பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் இருவரில் ஒருவர், அல்லது ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்படலாம்.

நடுவரிசையைப் பலப்படுத்த ஸ்ரேயாஸ் அய்யர், ஷுப்மான் கில் இருவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். தொடக்க வரிசைக்கு மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா இருக்கிறார்கள். கூடுதலாகத் தொடக்க வீரர்களுக்கு அபிமன்யு ஈஸ்வரன், அல்லது பிரியங்க் பஞ்சால் இருவரில் ஒருவர் தேர்வாகலாம். இந்த இருவரும் புஜாரா இடத்தில் இறங்கியும் விளையாடக்கூடியவர்கள் என்பதால் பயிற்சியாளர் திராவிட் இளம் வீரர்களுக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்து தேர்வு செய்யப் பரிந்துரைக்கலாம்.

தென் ஆப்பிரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானவை என்பதால், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்படும். அஸ்வின், ரவி்ந்திர ஜடேஜா தவிர்த்து ஜெயந்த் யாதவ் மட்டும் தேர்வாகலாம்.

உத்தேச அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சத்தேஸ்வர் புஜாரா, அஜின்கயே ரஹானே, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், அல்லது தீபக் சஹர், விருதிமான் சாஹா, மயங்க் அகர்வால், ஷுப்மான் கில், அபின்மன்யு ஈஸ்வரன், ஹனுமா விஹாரி, பிரியங்க் பஞ்சால், ஜெயந்த் யாதவ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x