Published : 05 Dec 2021 10:03 PM
Last Updated : 05 Dec 2021 10:03 PM

வெற்றியை நோக்கி இந்திய அணி: நியூஸி. போராட்டம்: 41 ஆண்டுகள் சாதனையை முறியடித்த அஜாஸ் படேல் 

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் அஸ்வின் | படம் உதவி ட்வி்ட்டர்

மும்பை


மும்பையில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் தோல்வியைத் தவிர்க்க நியூஸிலாந்து அணி போராடி வருகிறது.

540 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் சேர்த்துள்ளது.

நியூஸிலாந்து அணி தோல்வியைத் தவிர்க்க இன்னும் 400 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் இன்னும் 5 விக்கெட்டுகள் மட்டுமே இருக்கின்றன. இதனால், நாளைக்குள் போட்டியில் முடிவு கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூஸிலாந்து அணியில் ஹென்ரி நிகோலஸ் 36 ரன்களுடனும், ரச்சின் ரவிந்திரா 2 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர். அடுத்ததாக ஜேமிஸன் மட்டுமே ஓரளவுக்கு பேட்டிங் செய்யக்கூடியவர் மற்றவகையில் பேட்ஸ்மேன்கள் யாருமில்லை. ஆதலால், இரு விக்கெட்டுகள் வீழ்ந்தாலே அடுத்தடுத்து வரிசையாக விக்கெட்டுகள் வீழ்ந்துவிடும்.

நியூஸிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள், 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் என மொத்தம் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். கடந்த 1980ம் ஆண்டு இங்கிலாந்து ஆல்ரவுண்டர் இயான் போத்தம் இந்திய அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் 106 ரன்களுக்கு 13 விக்கெட்டுகள் வீழ்த்தியதே இதுவரை சாதனையாக இருந்தது. அதை அஜாஸ் படேல் முறியடித்துள்ளார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, நியூஸிலாந்து 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 263 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் சேர்்த்து டிக்ளேர் செய்தது.

2-ம் நாளான நேற்று ஆட்டநேர முடிவில், இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் சேர்த்திருந்தது.

புஜாரா 29 ரன்களுடனும், அகர்வால் 38 ரன்களுடனும் களத்தில் இருந்து இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர். மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்து டிக்ளேர் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆடியதால், ரன் சேர்க்கும் வேகத்தோடு ஆடினர்.

அகர்வால் அரைசதம் அடித்தநிலையில் 62 ரன்னில் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் விக்ெகட்டுக்கு புஜாரா, அகர்வால் ஜோடி 107 ரன்கள் சேர்த்தனர். நடுவரிசையில் களமிறங்கிய ஷுப்மான் கில்(47), புஜாரா(47), விராட் கோலி(36) என ஓரளவுக்கு ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

ஸ்ரேயாஸ் அய்யர்(14), சாஹா(13) ரன்களில் வெளியேறினர். அக்ஸர் படேல் அதிரடியாக ஆடி பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசினார். அக்ஸர் படேல் 26 பந்துகளில் 41 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.இதில் 4 சிக்ஸர், 3 பவுண்டரி அடங்கும். இந்திய அணி 70 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

நியூஸிலாந்து தரப்பில் படேல் 4 விக்கெட்டுகளையும்,ரவிந்திரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
540 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்கியது. லாதம், யங் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிதுநேரத்திலேயே லாதம் 6 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.

அடுத்துவந்த மிட்ஷெல், யங்குடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடிய நிலையில் இந்த கூட்டணியையும் அஸ்வின் பிரி்த்தார். யங் 20 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் விக்ெகட்டை பறிகொடுத்தார். அடுத்துவந்த ரோஸ் டெய்லர் 6 ரன்னில் அஸ்வினிடம் விக்கெட் இழந்து இந்தமுறையும் சொதப்பினார்.

அடுத்துவந்த நிகோலஸ், மிட்ஷெலுடன் சேர்ந்து நிதானமாக ஆடத் தொடங்கினர். மிட்ஷெல் அருமையாக ஆடி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும், 73 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். மிட்ஷெல் 60 ரன்னில்அக்ஸர் படேலிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்துவந்த விக்கெட் கீப்பர் பிளென்டல் ரன்அவுட் ஆகி டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x