கோலியின் தேவையற்ற சாதனை; அகர்வால் அற்புத சதம்: இந்திய அணி நிதான ஆட்டம்
மயங்க் அக்ரவாலின் அற்புதமான சதத்தால் மும்பையில் நடந்து வரும் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையை எட்டியுள்ளது.
இந்திய அணி 70 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 120 ரன்களுடன் ஆட்டமிழக்காமலும், விருதிமான் சஹா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்தப் போட்டியில் மீண்டும் களமிறங்கினார். 4 பந்துகளைச் சந்தித்த நிலையில் படேல் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். படேல் வீசிய 30-வது ஓவரிலேயே புஜாராவும் க்ளீன் போல்டாகி டக் அவுட்டில் வெளியேறினார்.
வேண்டாத சாதனை
விராட் கோலி கேப்டனாக டக் அவுட்டில் ஆட்டமிழப்பது இது 10-வது முறையாகும். அதாவது இந்திய அணியின் கேப்டன் ஒருவர் அதிகமான முறை டக் அவுட்டில் ஆட்டமிழப்பது கோலி மட்டும்தான். அருமையான சாதனை. அது மட்டுமல்லாமல் உள்நாட்டில் நடந்த போட்டிகளில் கேப்டனாக கோலி 6-வது முறையாக டக் அவுட்டில் ஆட்டமிழந்துள்ளார். அணியில் 4-வது வீரராகக் களமிறங்கி டக் அவுட்டில் கோலி ஆட்டமிழப்பது 11-வது முறையாகும். சர்வதேச அளவில் கோலியின் 30-வது டக் அவுட் இதுவாகும்.
ஏன் இவர்களை அமரவைக்கக் கூடாது?
டெஸ்ட் போட்டியில் ரஹானே, புஜாரா, விராட் கோலியின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. ரஹானே மட்டுமல்லாமது புஜாரா, கோலி இருவரையும் சேர்த்து அமரவைத்திருக்கலாம். அதிலும் கோலி கடந்த 57 இன்னிங்ஸ்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
கடைசியாக 2019-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி கொல்கத்தாவில் வங்கதேசத்துக்கு எதிராக கோலி சதம் அடித்தார். அந்த டெஸ்ட்டில் வங்கதேச அணியில் சஹிப் அல்ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மானும் விளையாடாத அணியுடன் கோலி சதம் அடித்தார். அதன்பின் இன்னும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடந்த 2020-ம் ஆண்டில் விராட் கோலியின் சராசரி 25 ரன்கள் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அவுட் சர்ச்சை
இன்றைய ஆட்டத்தில்கூட விராட் கோலி கால்காப்பில் வாங்கியதற்கு நடுவர் அவுட் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், மூன்றாவது நடுவர் ஆய்வில் பந்து கோலியின் கால்காப்பில் பட்டுதான் பேட்டில் பட்டது. பேட்டில் பட்டு கால்காப்பில் படவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால், சமூக வலைதளத்தில் கோலியின் அவுட் சர்ச்சையாகிவிட்டது.
மும்பை வான்ஹடே மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டம் தாமதமாகவே தொடங்கியது. இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ஷுப்மான் கில், மயங்க் அகர்வால் இருவரும் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஷுப்மான் 44 ரன்கள் சேர்த்து படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 80 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
ஆனால் இதே 80 ரன்களுக்கு அடுத்தடுத்து இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. படேல் வீசிய 30-வது ஓவரின் 2-வது பந்தில் புஜாரா க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார், அதே ஓவரின் 6-வது பந்தில் கேப்டன் கோலி கால்காப்பில் வாங்கி டக் அவுட்டில் பெவிலியின் திரும்பினார்.
80 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்த இந்திய அணி அடுத்த 3 விக்கெட்டுகளை அதே ரன்னுக்கு இழந்தது பரிதாபத்துக்குரியது. அடுத்துவந்த ஸ்ரேயாஸ் அய்யர், அகர்வாலுக்குத் துணையாக ஆடினார். சிறப்பாக ஆடிய அகர்வால் 110 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
கடந்த போட்டியில் சதம் அடித்த ஸ்ரேயாஸ் அய்யர் இந்தப் போட்டியில் ஏமாற்றி, 18 ரன்களில் படேல் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 80 ரன்கள் சேர்த்தனர். அடுத்துவந்த சஹா, அகர்வாலுக்கு ஒத்துழைத்து ஆடினார். அற்புதமான இன்னிங்ஸை ஆடிய அகர்வால் 196 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் தனது 4-வது சதத்தை நிறைவு செய்தார்.
எப்போதோ அடித்த சதம்
கான்பூர் டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் சொதப்பினாலும், மும்பை டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து டெஸ்ட் அரங்கில் தனக்குரிய இடத்தைத் தக்கவைத்துள்ளார். ஸ்ரேயாஸ் அய்யர், அகர்வால் போன்ற இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களின் நிலைத்தன்மையான ஆட்டத்தைத் தக்கவைத்து வருகிறார்கள்.
ஆனால், கோலி, புஜாரா, ரஹானே போன்ற சீனியர் வீரர்கள் எப்போதோ அடித்த சதத்தை மட்டும் வைத்து நிலைத்தன்மை இல்லாமல் பேட்டிங்கை வெளிப்படுத்தியும் அணியில் தொடர்ந்து இடம் பெறுவதன் காரணம் தெரியவில்லை. நியூஸிலாந்து தரப்பில் 4 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல் கைப்பற்றினார்.
