

மும்பையில் நடந்துவரும் இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து புதிய சாதனையை 132 ஆண்டுகளுக்குப் பின் படைத்துள்ளன.
மும்பையில் இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியைக் கடைசி நேரத்தில் கோட்டை விட்டது. 284 ரன்கள் இலக்கைத் துரத்திய நியூஸிலாந்து அணி தோல்வியின் பிடியில் இருந்தபோது, கடைசி விக்கெட்டுக்கு படேல், ரவிந்திரா ஜோடி சேர்ந்து இந்திய அணியிடம் இருந்து வெற்றியைப் பறித்தது.
9 விக்கெட்டுகளை 2-வது இன்னிங்ஸில் வீழ்த்திய கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் போராடிய நேரத்தில் வெளிச்சக் குறைவு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டதால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் இரு அணிகளிலும் கேப்டன்கள் மாற்றம் நடந்துள்ளன.
கான்பூர் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணிக்கு கேப்டனாக ரஹானே பொறுப்பேற்றார். 2-வது டெஸ்ட் போட்டியான மும்பையில் நடந்து வரும் போட்டியில் வழக்கமான கேப்டன் கோலி வந்துவிட்டதால், ரஹானே அமரவைக்கப்பட்டார். கோலி கேப்டன் பொறுப்பை ஏற்று இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.
நியூஸிலாந்து அணியில் கான்பூர் டெஸ்ட் போட்டிக்கு வில்லியம்ஸன் கேப்டன் பொறுப்பேற்றுச் செயல்பட்டார். ஆனால், வில்லியம்ஸனுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டதால், மும்பை டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக கேப்டன் பொறுப்பை டாம் லாதம் கவனிக்கிறார்.
ஆக இரு டெஸ்ட் போட்டிகளுக்கு இரு அணிகளிலும் 4 கேப்டன்கள் அணியை வழிநடத்தியுள்ளனர். இதுபோன்று இரு டெஸ்ட் போட்டிகளிலும் 4 கேப்டன் அணியை வழிநடத்துவது கிரிக்கெட்டில் மிகவும் அரிதாகும்.
இதற்கு முன் கடைசியாகக் கடந்த 1889-ம் ஆண்டு இதேபோன்று இரு டெஸ்ட் போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் செயல்பட்டிருந்தனர். தென் ஆப்பிரிக்காவுக்கு இங்கிலாந்து அணி பயணம் செய்தது. அப்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு ஓவன் டன்னல் மற்றும் வில்லியம் மில்டன் என இரு போட்டிகளுக்கு இரு கேப்டன்கள் இருந்தனர். அதேபோல, இங்கிலாந்து அணிக்கு ஆப்ரே ஸ்மித், மான்டி பவுடன் என இரு கேப்டன்கள் செயல்பட்டனர்.
ஏறக்குறைய 132 ஆண்டுகளுக்குப் பின் இதேபோன்று 2 டெஸ்ட் போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் செயல்பட்டு அணியை வழிநடத்தி சாதனை படைத்துள்ளனர்.