தோனி அல்ல, என்னைப் பொறுத்தவரை கோலிதான் ஃபினிஷர்: கவுதம் கம்பீர் அதிரடி

தோனி அல்ல, என்னைப் பொறுத்தவரை கோலிதான் ஃபினிஷர்: கவுதம் கம்பீர் அதிரடி
Updated on
1 min read

ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பவர் என்றால் தன்னைப் பொறுத்தவரை விராட் கோலிதான் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஆஜ்தக் தொலைக்காட்சியின் சலாம் கிரிக்கெட் நிகழ்ச்சியில் அவரிடம் அணியின் ஃபினிஷர் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது, “தோனிக்கு ஃபினிஷர் அடையாளம் கொடுத்தது ஊடகங்களே. என்னைப் பொறுத்தவரை ஃபினிஷர் விராட் கோலிதான்.

தொடக்க வீரர் கூட நல்ல ஃபினிஷராக இருக்க முடியும், 6 அல்லது 7-ம் நிலையில் களமிறங்குபவர் மட்டும்தான் ஃபினிஷராக இருக்க வேண்டிய அவசியமில்லை.

தோனி முன்வரிசையில் களமிறங்க விருப்பம் தெரிவிப்பதாக நாங்கள் கேள்விப்படுகிறோம், எந்த நிலையில் களமிறங்குவது என்பது பற்றி அவர் தீர்மானமான முடிவெடுக்க வேண்டும்.

நல்ல தலைமைத்துவம்தான் உலகக் கோப்பைகளை அணி வெல்வதற்குக் காரணம் என்றால் நம் அணி கூடுதல் உலகக்கோப்பைகளை வென்றிருக்கும். நாம் 3 உலகக்கோப்பைகளில் வெற்றி பெற்றுள்ளோம் அவ்வளவே. கேப்டன் திட்டமிட முடியும் ஆனால் மற்ற 10 வீரர்கள்தான் களத்தில் திட்டத்தை செயல்படுத்துபவர்கள்.

மேலும் ஒரு அணியை வழிநடத்தும் கேப்டனுக்கும் அந்த அணிக்கும் சமமுக்கியத்துவமே உள்ளது” என்றார்.

2013 ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து கம்பீர் கூறும்போது, “களத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளை தனிநபர் மீதான தாக்குதலாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

அங்கு எனக்கு நட்பெல்லாம் ஒன்றும் கிடையாது. மீண்டும் வாக்குவாதம் செய்ய வேண்டுமென்றால் அதிலிருந்தும் நான் பின்வாங்க மாட்டேன். எதிரணியில் யார் இருக்கிறார்கள் என்பது எனது அணுகுமுறையில் வித்தியாசத்தை ஏற்படுத்தாது. அது தோனியாக இருந்தாலும் சரி, விராட் கோலியாக இருந்தாலும் சரி. தலைவர் எவ்வழியோ வீரர்கள் அவ்வழி, நான் அடங்கிப் போனால் எனது அணியும் அடக்கப்படும்” என்றார் கம்பீர்.

அதே போல் 2011 உலகக்கோப்பையை சச்சின் டெண்டுல்கருக்காக வெல்ல வேண்டும் என்ற மற்ற வீரர்களின் கருத்தை தான் ஏற்கவில்லை என்று கூறிய கம்பீர், “நாட்டுக்காக ஆடுவதே மிகப்பெரிய ஊக்குவிப்பாகும். எந்த ஒரு தனிநபரையும் விட நாடுதான் பெரியது” என்றார் இதற்கு பார்வையாளர்கள் கரகோஷம் செய்து ஆமோதித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in