

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்றில் நெதர்லாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்றது. இதன் மூலம் அந்த அணி ஆறுதல் வெற்றியை பெற்றது.
‘ஏ’ பிரிவில் தர்மசாலாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று போட்டியில் நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இந்த இரு அணிகளும் ஏற்கெனவே ஒரு போட்டியில் தோற்றதால் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்திருந்தன. இந்நிலையில் ஆறுதல் வெற்றியை பெறும் நோக்கத்தில் இரு அணிகளும் களம் இறங்கின.
மழை காரணமாக இப்போட்டி 6 ஓவர்களைக் கொண்டதாக குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 6 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 59 ரன்களை எடுத்தது.
இதைத்தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணியால் 6 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 47 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் நெதர்லாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் வெற்றி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 பயிற்சி ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களின் இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்தது.
162 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் ஆடவந்த மேற்கிந்திய தீவுகள் அணி, 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை சேர்த்து வெற்றி பெற்றது.