வாழ்க்கையில் காதலையே பார்க்காமல் வெறுப்படைந்தவர்களே அனுஷ்கா சர்மாவை சாடுகின்றனர்: கவாஸ்கர் கருத்து

வாழ்க்கையில் காதலையே பார்க்காமல் வெறுப்படைந்தவர்களே அனுஷ்கா சர்மாவை சாடுகின்றனர்: கவாஸ்கர் கருத்து
Updated on
1 min read

அனுஷ்கா சர்மாவை தொடர்ந்து கேலி செய்பவர்களை விராட் கோலி நேற்று கடுமையாக எதிர்கொண்டதையடுத்து சுனில் கவாஸ்கரும் விராட் கோலிக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: இவர்கள் அனைவரும் வெறுப்பாளர்களே. எனக்கு விராட் கோலி-அனுஷ்கா சர்மா உறவுகளின் நிலை என்னவென்று தெரியாது. அவர் ஒரு அருமையான பெண், இருவரும் சேர்ந்திருக்கும் போது அற்புதமாகவே இருக்கிறது. இந்திய பேட்டிங்கின் முக்கியமான வீரராக கோலி எழுச்சியுறும் போது அனுஷ்கா சர்மாதான் விராட் கோலியிடத்தில் ஸ்திரமான, உறுதியான மனநிலையை உருவாக்கியுள்ளார். விராட் கோலியே இப்படித்தான் கூறியுள்ளார், அதாவது அனுஷ்கா சர்மா அவரது வாழ்க்கையில் நிறைய தன்னம்பிக்கையை ஏற்படுத்தினார் என்று.

அனுஷ்கா சர்மா ஸ்டேடியத்தில் இருப்பதால்தான் கோலி ஆட்டமிழக்கிறார் என்று கூறுவது தவறு. அவருக்கு என்ன கிடைக்கப் போகிறது இதனால். முதல் பந்திலேயே அவுட் ஆனாலும் கோலி ஓய்வறையிலிருந்து சென்று அனுஷ்கா அமர்ந்திருக்கும் இடத்துக்குச் சென்று அவரை பார்க்க முடியாது. ஆகவே அனுஷ்கா சர்மாவை சாடுபவர்களைப் பற்றி நான் கூறுவதெல்லாம், வாழ்க்கையில் காதலையே பார்க்காமல் வெறுப்படைந்தவர்களே இவர்கள். அதனால் தான் பரிதாபத்திற்குரிய அனுஷ்கா சர்மாவை குறிவைக்கின்றனர்.

விராட் கோலி ஒரு மனிதராகவும், கிரிக்கெட் வீரராகவும் வளர்ச்சியடைய உதவியவரே அனுஷ்கா சர்மா என்றே நான் நினைக்கிறேன்.

கோலியின் கிரிக்கெட் ஆட்டம் பற்றி..

அவர் டி20 கிரிக்கெட்டாக இருந்தாலும் முறையான கிரிக்கெட் ஷாட்களையே ஆடுகிறார். அவர் ஆடிய ‘டிரைவ்கள்’ ஆச்சரியமளிக்கக் கூடியது. அந்த ஷாட்களில் அனைத்துமே சரியாக அமைந்தது. மேலும் அவரிடம் விலைமதிப்பில்லாத சக்தியும், பந்துகளை சரியாக டைம் செய்யும் திறமையும் உள்ளது. சரியான கிரிக்கெட் ஆட்டத்தையே அவர் ஆடுகிறார். காடா சுற்றும் ஆட்டம் தேவையில்லை என்று அவர் நினைக்கிறார். 4 பவுண்டரிகளை ஒரே ஓவரில் அடித்து விட்டு, அருமையாக ஓடியும் ரன்களை எடுத்ததால் 20 ரன்களை ஒரே ஓவரில் அவரால் எடுக்க முடிகிறது.

அவர் இந்திய அணிக்காக வெற்றிகளைப் பெற்று தருகிறார். கடினமான சூழ்நிலைகளிலிருந்து இந்திய அணியை விடுவிக்கிறார். ஆட்டத்திலும் ஒரு கவர்ச்சி உள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டுதலைப் பெறும் புகழை அவர் எட்டுவார்.

ஒரு பேட்ஸ்மேன் தனது 26-33 வயதுக்கிடையில்தான் தனது உச்சத்தை எட்டுவார். கோலிக்கு இப்போது வயது 27தான் ஆகிறது. எனவே அடுத்த 7-8 ஆண்டுகளுக்கு... பந்துவீச்சாளர்களுக்கு எனது உண்மையான அறிவுரை என்னவெனில் ஒன்று விக்கெட் கீப்பிங் இல்லையெனில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுக்கட்டும் என்பதே.

இவ்வாறு கூறினார் கவாஸ்கர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in