ராகுல் திராவிட் தந்த ஊக்கப் பரிசு: தரமான ஆடுகளம் அமைத்த பிட்ச் வடிவமைப்பாளருக்கு ரூ.35 ஆயிரம் வெகுமதி 

இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட்   | கோப்புப் படம்.
இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் | கோப்புப் படம்.
Updated on
2 min read

கான்பூரில் நடந்த நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இருதரப்புக்கும் சாதகமான, தரமான, போட்டித்தன்மை மிகுந்த ஆடுகளத்தை வடிமைத்த பிட்ச் தயாரிப்புக் குழுவுக்கு ரூ.35 ஆயிரம் பரிசாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் வழங்கியுள்ளார்.

கான்பூரில் நடந்த இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எந்த முடிவும் எட்டப்படாமல் டிராவில் முடிந்தது. வெளிச்சக் குறைவு காரணமாகக் கடைசி நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டதால் டிராவில் முடிந்தது.

284 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்திருந்தபோது, வெளிச்சக் குறைவு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் தோல்வியின் பிடியில் இருந்த நியூஸிலாந்து அணி இயற்கையின் உதவியால், தோல்வியிலிருந்து தப்பித்தது. நியூஸிலாந்து தரப்பில் ரவிந்திரா 18, பட்டேல் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து அணியைத் தோல்வியடையாமல் காத்தனர்.

டெஸ்ட் போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த ஆட்டங்கள் 3 நாட்களிலும், இரண்டரை நாட்களிலும் முடியும் வகையில் ஆடுகளத்தைத் தரமற்றதாக, குழி பிட்ச்சாக அமைத்திருந்தார்கள். ஆடுகளத்தின் தன்மை குறித்து சர்வதேச அளவில் விமர்சனங்களும் எழுந்தன.

இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றவுடன் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கு சென்னையிலும், அகமதாபாத்திலும் அமைக்கப்பட்ட ஆடுகளம் குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. 3 நாட்களில் முடியும் வகையில் ஆடுகளத்தை அமைத்து அனைவரின் எரிச்சலையும் வாங்கிக் கட்டினர்.

ஆனால், கான்பூர் ஆடுகளம், நியூஸிலாந்து, இந்திய அணிகளுக்குச் சாதகமாக இருக்கும் வகையில், திறமையானவர்கள் வெல்லும் வகையில் நடுநிலையுடன் அமைக்கப்பட்டது. இதனால்தான் டெஸ்ட் போட்டியைக் கடைசி நாள் வரை கொண்டுவர முடிந்தது.

ஆடுகளத்தைச் சிறப்பாக வடிவமைத்தமைக்காக பிட்ச் வடிமைப்பாளர் குழுவினருக்கு ராகுல் திராவிட் ரூ.35 ஆயிரம் வெகுமதி வழங்கியுள்ளார்.

உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில், “ராகுல் திராவிட் தன் சொந்தப் பணத்திலிருந்து ரூ.35,000 பிட்ச் வடிவமைப்பாளர்களுக்கு வழங்கியுள்ளார்” என்று தெரிவித்துள்ளது.

ராகுல் திராவிட் தான் விளையாடிய காலத்தில் நேர்மையான பேட்ஸ்மேன் என்று வர்ணிக்கப்பட்டவர். நடுவர் அவுட் கொடுக்கும் முன், தனக்கு அவுட் எனத் தெரிந்தால், நடையைக் கட்டிவிடுவார். ஆடுகளம் நேர்மையான முறையில், சாதக, பாதகமில்லாமல் அமைக்கப்பட்டதற்காக ரூ.35 ஆயிரம் பரிசு வழங்கிய திராவிட் கிரிக்கெட்டில் வித்தியாசமானவர்.

ஷிவ்குமார் தலைமை கிரவுண்ட்ஸ்மென் குழுவினர் கூறுகையில், “கான்பூர் டெஸ்ட் போட்டியின் முன்பு பிட்ச் குறிப்பிட்ட வகையில் தயாரிக்க வேண்டும் என்று எந்த ஒரு அறிவுறுத்தலும் அணியின் தரப்பிலிருந்து வரவில்லை. எங்கள் குழுவுக்கு ராகுல் திராவிட் ரூ.35,000 கொடுத்து ஸ்போர்ட்டிங் பிட்ச்சைத் தயாரிக்கக் கோரினார்” எனத் தெரிவித்தார்.

கிரிக்கெட் பிறந்த இடம் இங்கிலாந்தாக இருந்தாலும் பல்வேறு தருணங்களில் உயர்த்திப் பிடித்து அதைப் புனிதமாகப் பாவிப்பது இந்தியாவில் மட்டும்தான். இதுபோன்ற நடுநிலையுடன் போட்டியை நடத்த முன்னுதாரணமாக ராகுல் திராவிட் திகழ்கிறார் என்று கூறலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in