

டி 20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத் தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்காக 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் குவித்தது. ஆம்லா, டி காக், டுமினி ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
டி 20 உலகக் கோப்பையில் குரூப் 1-ல் இடம் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த தென் ஆப்பிரிக்கா ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. ஆம்லா, குயின்டன் டி காக் ஜோடி இங்கிலாந்து பந்து வீச்சை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டியது. இதனால் பவர் பிளேவில் 83 ரன்கள் குவிக்கப்பட்டது. 7.1 ஓவரில் ஸ்கோர் 96 ஆக இருக்கும் போது டி காக் ஆட்டமிழந்தார்.
அவர் 24 பந்தில், 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 52 ரன் எடுத்தார். அடுத்து வந்த டி வில்லியர்ஸ் 8 பந்தில், 2 சிக்ஸருடன் 16 ரன் எடுத்து வெளியேறினார். 11.5 ஓவரில் ஸ்கோர் 133 ஆக இருந்த போது மொயின் அலி பந்தில் ஆம்லா ஆட்டமிழந்தார். ஆம்லா 31 பந்தில், 3 சிக்ஸர், 7 பவுண்டரி களுடன் 58 ரன் விளாசினார். அடுத்து வந்த டுபிளெஸ்ஸி 17 ரன்னில் வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் டுமினி 28 பந்தில் 54 ரன்னும், டேவிட் மில்லர் 12 பந்தில் 28 ரன்னும் விளாச 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி 2 விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து 230 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து பேட் செய்ய தொடங்கியது.