

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி தேடித் தந்த இன்னின்ஸை ஆடியதையடுத்து விராட் கோலியின் புகழ் உச்சத்திற்குச் சென்றுள்ளது. முன்னாள் அதிரடி வீரர் விரேந்திர சேவாக் தனது புகழ்ச்சியில் மேலதிக தாராளம் காட்டியுள்ளார்.
சேவாக்:
"நான் இப்படிப்பட்ட பேட்டிங்கை பார்த்ததில்லை. பவுலர்களுக்கு துர்சொப்பனங்களை வழங்கும் ஒரு பேட்ஸ்மெனிடமிருந்து இத்தகைய இன்னிங்ஸ் வந்துள்ளது. அனைத்து காலத்திற்குமான பேட்ஸ்மெனாக அவர் வளர்ச்சியடைந்து வருகிறார். கேப்டன்சியைக் கையில் எடுத்து கொண்டதிலிருந்து அவரது பேட்டிங்கில் ஏற்பட்டுள்ள மாற்றம் வியப்புக்குரியது. ஒரு புதிய காலக்கட்டத்தின் தொடக்கமாக நான் இதனைக் காண்கிறேன்.
கோலி தனது ஆஃப் திசை ஆட்டத்தில் நிறைய புதுமைகளை புகுத்தியுள்ளார். இவர் பொதுவாக நீண்ட காலம் ஆன் திசையில் சிறந்த பேட்ஸ்மேனாகவே இருந்தார்.
கபில்தேவ்:
எந்த ஒரு கிரிக்கெட் வடிவமாக இருந்தாலும் எனது முதல் தெரிவு விராட் கோலியே.
அனில் கும்ளே:
கிரீஸில் அவரது சமநிலை என்னை கவர்கிறது. அதாவது அவரது அணுகுமுறை மற்றும் திறமை. அவர் ஆன் திசையில் மட்டும் ஆட விருப்பமுள்ளவர் போல் தெரியவில்லை, ஆஃப் திசையிலும் சரிசமமாக சிறப்பாக விளங்குகிறார். ஆஃப் திசை பேட்டிங்தான் விராட் கோலியிடம் நான் கடந்த 2 ஆண்டுகளாகக் கண்ட மிகப்பெரிய வளர்ச்சி.
மொஹீந்தர் அமர்நாத்:
விராட் தனது ஆளுமையினால் சிறந்த தலைவராக விளங்குகிறார் என்பதை நான் எப்போதுமே நம்பி வந்துள்ளேன். அவர் சவாலை உணர்வுடன் சந்திக்கிறார். சாதிக்க வேண்டும் என்ற தீராத வெறி அவருக்கு உள்ளது. சவால்களை சந்திப்பதிலிருந்து அவர் விலகியதும் இல்லை, அத்தகைய சூழ்நிலைகளில் முடியாது என்று ஒதுங்கியதும் இல்லை.
விராட் கோலி களத்தில் உறுதியைக் கொண்டு வந்துள்ளார், ஆக்ரோஷமாகவும் அது இருக்கலாம், ஆனால் எதுவாக இருந்தாலும் அவரது தன்னம்பிக்கைதான் நிற்கிறது. விவ் ரிச்சர்ட்ஸ் சாதாரண கிரிக்கெட் ஷாட்களையே ஆடுவார், அதே போல்தான் விராட் கோலியும் ஆடுகிறார். விராட் கோலியின் உடல்தகுதியும் வியப்பளிக்க கூடியது. 3 ரன்கள் ஓடிய பிறகும் கூட உடனேயே அவர் தயாராகி விடுகிறார். அடுத்த பந்துக்கு அவர் புத்துணர்வுடன் தயாராகிவிடுகிறார்.
விவ் ரிச்சர்ட்ஸ் உச்சத்தில் இருந்த போது எப்படி ஆடினாரோ, அந்த ஆட்டத்தை எனக்கு தற்போது விராட் கோலி நினைவுபடுத்துகிறார்.