

குஜராத்தின் பரோடா கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து குர்னால் பாண்டியா இன்று திடீரென விலகியுள்ளார்.
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி விரைவில் நடக்க இருக்கும் நிலையில் ஆல்ரவுண்டர் குர்னல் பாண்டியா எந்தவிதமான காரணமும் இன்றி திடீரென விலகியுள்ளார்.
பரோடா கிரிக்கெட் அமைப்பின் செயலாளர் அஜிஸ் லீலே நிருபர்களிடம் கூறுகையில், ''பரோடா அணியின் கேப்டன் பதவியிலிருந்து குர்னல் பாண்டியா விலகியது உண்மைதான். ஆனால், ஒரு வீரராக விஜய் ஹசாரே கோப்பையில் அவர் விளையாடுவார்.
தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை மின்னஞ்சலில் வாரியத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். அந்தக் கடிதம் எனக்குக் கிடைத்தபின் இது முறைப்படி அறிவிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில் குர்னல் பாண்டியா தான் பதவி விலகியதற்கு எந்தவிதமான காரணத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், வீரராக அணியில் விளையாட விருப்பமாக இருப்பதாக குர்னல் பாண்டியா கூறியுள்ளார்” எனத் தெரிவித்தார்.
ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த குர்னல் பாண்டியா கடந்த சீசனில் பெரிய அளவுக்கு ரன்கள் ஸ்கோர் செய்யவில்லை.
15-வது ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் குர்னல் பாண்டியாவும், அவரின் சகோதரர் ஹர்திக் பாண்டியாவும் தக்கவைக்கப்படவில்லை. புதிதாக அகமதாபாத் அணி வருவதால் இருவரும் அந்த அணிக்குச் செல்லலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டித் தொடர் டிசம்பர் 8-ம் தேதி தொடங்குகிறது.