

பிரேசிலில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் ஜப்பான் அணி தோல்வி தழுவினாலும் ரசிகர்கள் அதற்காக வருந்தாமல் ஸ்டேடிய இருக்கைப் பகுதியில் போடப்பட்ட குப்பைகளை அகற்றியுள்ளனர்.
ஐவரி கோஸ்ட் அணிக்கு எதிரான போட்டியில் ஜப்பான் 90 நிமிடங்கள் வரை 1-0 முன்னிலை வகித்தது. ஆனால் கடைசி வினாடிகளில் 2 கோல்களை ஐவரி கோஸ்ட் அணி அடித்து 3 புள்ளிகளைத் தட்டிச் சென்றது.
இந்த ஆட்டத்தைக் காண சுமார் 100 ஜப்பானிய ரசிகர்கள் வந்திருந்தனர். அவர்கள் தங்கள் அணியை ஊக்கப்படுத்தியதோடு, தோற்றாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஸ்டேடியத்தில் இருக்கைக்கு அருகே போடப்பட்ட குப்பைகளை அகற்றியது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடைசி விசில் ஊதப்பட்டு ஆட்டம் நிறைவடைந்தவுடன் போட்டக் குப்பைகளைக் கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டுச் செல்லும் பொறுப்பில்லாத் தனத்தையே நாம் இதுவரை கண்டிருப்போம்.
மைதானங்கள் என்று இல்லை, எங்குமே நமக்கு குப்பைகள் பற்றிய சுற்றுச்சூழல் தன்னுணர்வு இருப்பதில்லை.
மாறாக சுற்றுச்சூழல் பற்றியத் தன்னுணர்வுடன் ஜப்பானிய ரசிகர்கள் குப்பைகளை அகற்றியது அவர்களது தேசத்திற்கு பெருமையை ஏற்படுத்திக் கொடுத்த ஒரு நிகழ்வாகியுள்ளது.