

டி 20 உலகக் கோப்பையில் குரூப் 1- ல் இடம் பெற்றுள்ள மேற் கிந்தியத் தீவுகள், நடப்பு சாம்பிய னான இலங்கை அணியுடன் இன்று மோதுகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இரு அணிகளுமே தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ளன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொள்ளலாம் என்பதால் கடும் போட்டி நிலவும். டேரன் சமி தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை பந்தாடியது.
47 பந்தில் சதம் விளாசிய கிறிஸ் கெய்லிடம் இருந்து இன்று மீண்டும் சிறப்பான ஆட்டம் வெளிப் படக்கூடும். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளை யாடி வரும் கெய்ல், மைதானத்தின் தன்மையை அறிந்தவர் என்பதால் அந்த அனுபவத்தைக்கொண்டு மீண்டும் அணிக்கு வெற்றித்தேடி கொடுக்க முயற்சி செய்வார்.
பார்மை இழந்து தவித்த இலங்கை அணி டி 20 உலகக் கோப்பை தொடரில், அறிமுக அணி யான ஆப்கானிஸ்தானை வென்று தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொண்டுள்ளது. 39 வயதான மூத்த வீரர் தில்ஷான், கேப்டன் மேத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை பொறுத்துதான் அணியின் வெற்றி அமையும்.
கடைசி கட்டத்தில் ரன்குவிப்பை சிறப்பான முறையில் கட்டுப் படுத்தும் திறன் கொண்ட வேகப் பந்து வீச்சாளர் மலிங்கா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளது இலங்கை அணிக்கு இழப்பு தான். அவருக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்டுள்ள அனுபவம் இல்லாத சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரே வாண்டர்ஸே, நான்கு சர்வதேச டி 20 போட்டிகளில் தான் விளையாடி உள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக 11 சிக்ஸர்கள் விளாசிய கெய்லுடன், மார்லோன் சாமுவேல்ஸ், டிவைன் பிராவோ, ஆந்த்ரே ரஸல் ஆகியோரும் அதிரடியில் மிரட்ட தயாராக உள்ளனர். சுழற்பந்து வீச்சில் சாமுவேல் பத்ரி, சுலைமான் பென் நெருக்கடித்தரக்கூடும்.