

புதுடெல்லியில் நாளை நடக்கும் சையத் முஷ்தாக் அலி டி20 கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் கர்நாடக அணியை எதிர்த்துக் களம் காண்கிறது நடப்பு சாம்பியன் தமிழக அணி.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த இறுதி ஆட்டத்தில் கர்நாடக அணியிடம் ஒரு ரன்னில் தோல்வி அடைந்திருந்தது தமிழக அணி. அந்தத் தோல்விக்கு நிச்சயம் இந்த முறை பழிதீர்க்கும் தமிழகம் என்று நம்பலாம்.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த போட்டியின்போது வலுவான வீரர்களான கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், தேவ்தத் படிக்கல், மணிஷ் பாண்டே உள்ளிட்ட பல வீரர்களுடன் இருந்தது. ஆனால், இந்த முறை தேவ்தத் படிக்கல், ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் இல்லை. மணிஷ் பாண்டே மட்டும்தான் இருக்கிறார் என்பதால், தமிழக அணி வலுவாகவே இருக்கிறது.
கடந்த ஆண்டு நடந்த இறுதி ஆட்டத்தில் பரோடா அணியை வீழ்த்தி தமிழக அணி, 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. நாளை நடக்கும் போட்டியில் கோப்பையைத் தமிழக அணி வென்றால், அதிகமான முறை பட்டம் வென்ற அணியாக மாறும்.
கர்நாடக அணியைப் பொறுத்தவரை அச்சறுத்தலாக இருப்பது ரோஹன், மணிஷ் பாண்டே போன்ற வீரர்கள்தான். ஆனால், கடந்த லீக் ஆட்டங்கள், அரையிறுதி, காலிறுதியில் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் ஜொலிக்கவில்லை. அதேசமயம் அவிநவ் மனோகர், அனிருத் ஜோஷி, பிஆர் சரத் ஆகியோரும் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பந்துவீச்சில் கர்நாடக அணி தமிழகத்தோடு ஒப்பிடுகையில் வலுவில்லாமல் இருக்கிறது. வித்யாதர் பாட்டீல், வியாஷக், தர்ஷன் ஆகியோர் மட்டுமே ஓரளவுக்குப் பந்துவீசுகிறார்கள். இதில் கடைசி இருவரும் அனுபவமில்லாதவர்கள்.
ஆனால், அனுபவம் வாய்ந்த பேட்டிங், பந்துவீச்சும் உடைய தமிழக அணியைச் சமாளிப்பது கர்நாடக அணிக்குச் சவாலாகத்தான் இருக்கும். மிகப்பெரிய ஸ்கோரை அடித்தால் மட்டுமே ஓரளவுக்குத் தமிழக அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.
கிருஷ்ணப்பா கவுதம், கரியப்பா, சசித் ஆகிய சுழற்பந்துவீச்சாளர்கள் இந்திய ஏ அணிக்குச் சென்றுவிட்டதால் பலவீனமாகவே காணப்படுகிறது.
ஆனால், தமிழக அணியைப் பொறுத்தவரை தொடக்க வீரர் ஜெகதீசன் காலிறுதி, அரையிறுதியில் மட்டும்தான் சரியாக விளையாடவில்லை. லீக் ஆட்டங்களில் சிறப்பாக ஆடி ஒரு அரை சதம் உள்பட 163 ரன்கள் சேர்த்துள்ளார். ஹரி நிசாந்த் 177 ரன்கள், சாய் சுதர்ஸன் 173, கேப்டன் விஜய் சங்கர் 181 ரன்கள் என அபாரமான ஃபார்மில் உள்ளனர். இது தவிர நடுவரிசையில் பவர் ஹிட்டர் ஷாருக்கான் உள்ளார்.
கடந்த இரு போட்டிகளாக காயத்தால் களமிறங்காத வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளார். இது தவிர சந்தீப் வாரியர், அரையிறுதியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சரவணக்குமார், முருகன் அஸ்வின், ஷாய் கிஷோர், சஞ்சய் யாதவ் ஆகியோர் மிரட்டல் விடுப்பார்கள்.
கர்நாடக அணியோடு ஒப்பிடுகையில் தமிழக அணி பந்துவீச்சு, பேட்டிங்கில் வலுவாக இருக்கிறது. பந்துவீச்சில் பல்வேறு விதமான பந்துவீச்சாளர்கள் இருப்பது மிகப்பெரிய பலம் என்பதால், 3-வது கோப்பையைத் தமிழக அணிக்கு எதிர்பார்க்கலாம்.