முஸ்தாக் அலி டி20; தொடர்ந்து 2-வது முறையாக ஃபைனலில் தமிழகம்: சரவணன் பந்துவீச்சில் சுருண்டது ஹைதராபாத் 

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

சயத் முஷ்தாக் அலி டி20 தொடரின் இறுதிப் போட்டிக்குத் தமிழக அணி 2-வது முறையாகத் தகுதி பெற்றுள்ளது.

புதுடெல்லியில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழக அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 91 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி, 34 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

தமிழக அணியின் மிதவேகப் பந்துவீச்சாளர் பி.சரவணன் அபாரமாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 3.3 ஓவர்கள் வீசிய சரவணன் 2 மெய்டன்கள் எடுத்து 21 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சரவணனுக்கு இது 3-வது டி20 போட்டியாகும். உறுதுணையாகப் பந்துவீசிய தமிழக வீரர் முருகன் அஸ்வின், முகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதற்கு முன் தமிழக வீரர் ரஹில் ஷா 12 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாக இருந்து வருகிறது. அதற்கு அடுத்தாற்போல் 2-வது பந்துவீச்சு சரவணன் பந்துவீச்சாகும்.

ஹைதராபாத் அணியில் தன்மே தியாகராஜன் (25) மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

தமிழக வீரர் சரவணன் பந்துவீச்சில் ஹைதராபாத் அணியின் கேப்டன் தன்மே அகர்வால் (1), திலக் வர்மா (8), பிரக்னே ரெட்டி (8), ஹிமாலே அகர்வால் (0) தியாகராஜன் (25) ஆகியோர் விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.

ஒரு கட்டத்தில் ஹைதராபாத் அணி 6.2 ஓவர்களில் 30 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்தது. அதன்பின் தியாகராஜன், சமா மிலிந்த் இருவரும் சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். இதில் தியாகராஜன் மட்டும் ஓரளவுக்கு நிலைத்து ஆடாமல் இருந்தால் 50 ரன்களில் ஹைதராபாத் அணி சுருண்டிருக்கும்.

91 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. கடந்த காலிறுதி ஆட்டத்தைப் போல் இந்த ஆட்டத்திலும் ஜெகதீஸன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். ஹரி நிசாந்த் 14 ரன்னில் வெளிேயறினார்.

ஆனால், இளம் வீரர் சாய் சுதர்ஸன் (34), கேப்டன் விஜய் சங்கர் (43) இருவரும் நிலைத்து ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். நிதானமாக ஆடிய கேப்டன் விஜய் சங்கர் வெற்றி இலக்கை நெருங்கியபோது, ரக்சனன் ரெட்டி பந்துவீச்சில் பவுண்டரி, சிக்ஸர் அடித்து ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தார்.

திங்கள்கிழமை நடக்கும் இறுதி ஆட்டத்தில் கர்நாடக அணியுடன் மோதுகிறது தமிழக அணி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in