Last Updated : 20 Nov, 2021 09:58 AM

 

Published : 20 Nov 2021 09:58 AM
Last Updated : 20 Nov 2021 09:58 AM

வீரர்களுக்கு சுதந்திரம் முக்கியம்;அதை நான் தருகிறேன்: ரோஹித் சர்மா உற்சாகம்


இந்திய அணியில் உள்ள வீரர்களுக்கு சுதந்திரம் மிகவும் முக்கியம். அதை களத்தில் தேவையான அளவுக்கு நான் வழங்குகிறேன் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

ராஞ்சி்யில் நேற்று நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. 154 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 17.2 ஓவர்களில் 3 விக்ெகட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்து ஏறக்குறைய டி20 தொடரை கைப்பற்றிவிட்டது. இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக வந்துள்ள ராகுல் திராவிட், முழுநேரக் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோஹித் சர்மாவுக்கு கிடைத்துள்ள முதல்தொடர் இதுவாகும்.

அறிமுகப் போட்டியிலேயே அசத்தலாகப் பந்துவீசி 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஸல் படேலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

வெற்றிக்குப்பின் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஒட்டுமொத்த அணியின் மிகப்பெரிய கூட்டுமுயறச்சிதான் வெற்றிக்கு காரணம். கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் எளிதான சூழலில் இந்த வெற்றி கிடைக்கவில்லை, சூழலுக்கு ஏற்றார்போல் நாங்கள் எங்கள் திட்டத்தை செயல்படுத்தியது வியப்புக்குரியது. நியூஸிலாந்து அணியினரின் பேட்டிங் தரம் குறித்து தெரியும்,தொடக்கத்தில் நன்றாக அடித்து ஸ்கோரை உயர்த்தினார்கள்.

நான் சக வீரர்களிடம் கூறியது என்னவென்றால், முதலில் ஒரு விக்கெட் வீழ்த்துவதுதான் கடினமாக இருக்கும் அதன்பின், ஆட்டத்தை நமது பக்கம் திருப்பிவிடலாம் எனத் தெரிவித்தேன்.

எங்கள் அணியில் இருக்கும் காத்திருப்பு வீரர்களின் திறமையும் அபாரமானது, கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரை வீரர்களுக்கு தேவையான சுதந்திரம் வழங்குகிறேன். அதுதான் முக்கியம். வெளியிலிருக்கும் விஷயங்கள் அவர்களைப் பார்த்துக்கொள்ளும். இளம் வீரர்கள் அதிகமாக இருக்கிறார்கள், அதிகமான சர்வதேசப் போட்டிகளை விளையாடியதில்லை.

நடுப்பகுதி ஓவர்களில் இந்திய வீரர்கள் சிறப்பாகப் பந்துவீசினர். அடுத்தப் போட்டிக்கு வீரர்கள் தேர்வில் மாற்றம் இருக்குமா என இப்போது கூற முடியாது. ேதவை ஏற்பட்டால் நிச்சயம், அணிக்கு எது உகந்ததாக இருக்குமோ அதைச் செய்வோம். யார் விளையாடாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். ஹர்சல் படேல் சிறந்த பந்துவீச்சாளர், அதை மீண்டும் நிரூபித்துள்ளார். இந்த சூழலிலும் ஹர்சல் படேல் ஸ்லோவர் பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களை திணறவிட்டார்.

இவ்வாறு ரோஹித் சர்மா தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x