

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் இரு வீரர்கள் அறிமுகமாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூஸிலாந்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஜெய்ப்பூரில் நடந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது போட்டி ராஞ்சியில் இன்று இரவு நடக்கிறது.
புதிய கேப்டன் ரோஹித் சர்மா, புதிய பயிற்சியாளர் ராகுல் திராவிட் தலைமையில் சந்திக்கும் முதல் தொடர் என்பதால், வீரர்கள் தேர்விலும், இளம் வீரர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுக்கவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்திய அணியில் உள்ள பல இளம் வீரர்கள் ராகுல் திராவிட் பட்டை தீட்டியதால் உருவானவர்கள் என்பதால், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கி அவர்களின் திறமையை வெளிக்கொண்டுவர ஆர்வமாக இருக்கிறார். ஆதலால், இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் இரு மாற்றங்கள் இருக்கக்கூடும் எனத் தெரிகிறது.
இந்திய அணியில் தொடக்க வரிசையில் கேப்டன் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஒன்டவுனில் சூர்யகுமார் யாதவ், அதன்பின் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் ஆகியோரில் மாற்றம் இருக்காது. நடுவரிசையில் வெங்கடேஷ் அய்யருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
சுழற்பந்துவீச்சில் அஸ்வின், அக்ஸர் படேலும் இருக்கக்கூடும். வேகப்பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் தவிர்த்து ஆவேஷ் கான், ஹர்சல் படேல் புதிதாகக் களமிறங்கக் கூடும் எனத் தெரிகிறது. முகமது சிராஜ், தீபக் சஹர் இருவரும் அமரவைக்கப்பட வாய்ப்புள்ளது.
கடந்த போட்டியில் இருவரும் அதிகமான ரன்களை வாரி வழங்கினர். அதிலும் தீபக் சஹர் கடந்த ஐபிஎல் தொடரிலிருந்தே லைன் லென்த் கிடைக்காமல் சொதப்பலாகப் பந்து வீசி வருகிறார். ஆதலால், இன்றைய ஆட்டத்தில் இருவரும் அமரவைக்கப்பட்டு ஹர்சல் படேல், ஆவேஷ் கான் அறிமுகமாகலாம். அதேபோல ஸ்ரேயாஸ் அய்யரின் பேட்டிங்கும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. ஐபிஎல் தொடரிலிருந்தே ஸ்ரேயாஸ் அய்யரின் பேட்டிங்கில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.