

விஜய் சங்கர், சுதர்ஷன் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால், டெல்லியில் இன்று நடந்த சயத் முஸ்தாக் அலி டி20 போட்டியின் எலைட் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் கேரள அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த கேரள அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. 182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி 5 விக்கெட்டுகளை இழந்து, 3 பந்துகள் மீதமிருக்கையில் 187 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதன் மூலம் எலைட் பிரிவில் தமிழக அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. அரையிறுதியில் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது தமிழக அணி.
கேரள அணியில் தொடக்க வீரர்கள் முகமது அசாருதீன் (15), ரோஹன் குன்னும்மால் (51) இருவரும் நல்ல அடித்தளம் அமைத்து 45 ரன்களில் பிரிந்தனர். அடுத்து வந்த சச்சின் பேபி, குன்னும்மாலுடன் சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். குன்னும்மால் 51 ரன்கள் சேர்த்த நிலையில் முருகன் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் சாம்ஸன் டக் அவுட்டில் வெளியேறினார்.
4-வது விக்கெட்டுக்கு சச்சின் பேபி, விஷ்ணு வினோத் இருவரும் அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர். வினோத் தமிழக பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சைப் பிரித்து எடுத்துவிட்டார். சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டினார். சச்சின் பேபி 33 ரன்களில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 58 ரன்கள் சேர்த்தனர். வினோத் 26 பந்துகளில் 65 ரன்களுடனும் (7 சிக்ஸர், 2 பவுண்டரி), அகில் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
தமிழக அணியில் சஞ்சய் யாதவ், முருகன் அஸ்வின் மட்டுமே ஓவருக்கு 5 ரன்கள் வீதம் கொடுத்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 10 ரன்கள் வீதம் வாரி வழங்கினர்.
182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. தொடக்கத்திலேயே ஜெகதீஸன் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹரி நிசாந்த் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். நடுவரிசையில் கேப்டன் விஜய் சங்கர் (33), சாய் சுதர்ஷன் (46) சஞ்சய் யாதவ் (32) ஆகிய மூவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு நகர்த்தினர்.
ஷாருக்கான் 19 ரன்களுடனும், முகமது 6 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.