

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சை அடிக்க முடியவில்லை. அவரின் பந்துவீச்சு லைன்-லென்த் விலகாமல் வருவதால் விளையாடுவதற்கே கடினமாக இருக்கிறது என்று நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் தெரிவித்தார்.
ஜெய்ப்பூரில் நேற்று நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 2 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நியூஸிலாந்து அணிக்கு எதிராக கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி மவுண்ட் மவுங்கனியில் நடந்த டி20 போட்டியில் இந்திய அணி கடைசியாக வென்றது.
அதன்பின் நடந்த ஒருநாள் தொடர், டெஸ்ட் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலகக் கோப்பை எனத் தொடர்ந்து 7 தோல்விகளை இந்திய அணி சந்தித்து வந்தது. அந்த 7 தொடர் தோல்விகளுக்கும் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது ரோஹித் படை.
புவனேஷ்வர் குமார் நீண்ட காலத்துக்குப் பின் நேற்று கட்டுக்கோப்பாகப் பந்துவீசி பவர் ப்ளேயில் ஒரு விக்கெட்டையும் ஒட்டுமொத்தத்தில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். டி20 உலகக் கோப்பையிலும், ஐபிஎல் தொடரிலும் சொதப்பியதால் அணியில் புவனேஷ் இடம் ஊசலாட்டத்தில் இருந்த நிலையில் நேற்றைய பந்துவீச்சு ஓரளவுக்குப் பரவாயில்லை ரகத்தில்தான் இருந்தது.
அஸ்வின் தனது தேர்வை எப்போதும் நியாயப்படுத்துகிறார். இந்த ஆட்டத்திலும் கட்டுக்கோப்பாக வீசிய அஸ்வின் 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மற்ற வகையில் தீபக் சஹர், முகமது சிராஜ் இருவருமே ரன்களை வாரி வழங்கினர். கடைசி ஸ்பெல்லை மட்டும் இருவரும் ஒழுங்காக வீசினர். மற்றவகையில் இருவரின் பந்துவீச்சும் பெரிதாக இல்லை.
அஸ்வின் பந்துவீச்சு குறித்து நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்தில் கூறுகையில், “ அஸ்வின் பந்துவீச்சை அடிக்க முடியவில்லை. அவரின் பந்துவீச்சில் பந்து லைன்-லென்த் மாறாமல் பிட்ச் ஆவதால் பேட்ஸ்மேன் விளையாடக் கடினமாக இருக்கிறது.
அஸ்வின் தனது பந்துவீச்சில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறார், மோசமான பந்துகள் அதிகமாக வீசுவதில்லை. அஸ்வின் அவரின் வாழ்நாளில் அதிகமான மோசமான பந்துகளை வீசியிருப்பார் என எனக்கு நினைவில்லை. அவரின் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடுவது கடினமாகத்தான் இருந்தது” எனத் தெரிவித்தார்.