Last Updated : 14 Mar, 2016 03:56 PM

 

Published : 14 Mar 2016 03:56 PM
Last Updated : 14 Mar 2016 03:56 PM

தோனி பந்தை விளாசும் போது அவர் மட்டையிலிருந்து கிளம்பும் ஒலி...- சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

தோனி அதிரடி ஆட்ட வழிமுறைக்குத் திரும்பியதன் அறிகுறியாக அவர் பந்தை அடிக்கும் போது மட்டையிலிருந்து கிளம்பும் ஒலி உள்ளது என்றும் இது உலகக்கோப்பை டி20 தொடரில் இந்தியாவுக்கு நல்ல பலன் அளிக்கும் என்றும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

தனியார் சேனல் ஒன்றில் சச்சின் டெண்டுல்கர் இது பற்றி கூறியதாவது:

உலகில் எந்த ஒரு வீரரும் வாழ்நாள் முழுதும் சிறந்த ஃபார்மில் இருந்து விட முடியாது, மேலும் அவர் எந்திரமல்ல. ஆனால் தோனியின் மட்டையில் பந்து படும்போது ஏற்படும் ஒலியை நான் கேட்கும் போது அது வித்தியாசமான வேறொரு ஒலி என்பதாக எனக்குத் தோன்றியது. அந்த சப்தம்தான் பேட்ஸ்மேன் வித்தியாசமான வேறு மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிவுறுத்துவதாகும்.

தோனியிடம் உள்ள மிகப்பெரிய சொத்து என்னவெனில் அழுத்தங்களை தனதாக்கிக் கொள்ளும் அவரது திறமை, இதுதான் அவரை சிறந்த கேப்டனாக்கியுள்ளது. அவர் பதற்றத்தில் இருக்கும் போது கூட அதனை வெளிக்காட்டிக் கொள்வதில்லை, இது ஒரு நல்ல அறிகுறியாகும். பொதுவாக கேப்டன் பதற்றமடைந்தால் அது மற்ற வீரர்களிடத்திலும் எளிதாகப் பரவும், ஆனால் தோனியைப் பொறுத்தவரை இது நடக்காது.

யுவராஜ் சிங் குறித்து...

ஆசியக் கோப்பையின் போது யுவராஜ் சிங்கின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. தோனி போல்தான், பந்து மட்டையில் அடிபடும் போது ஏற்படும் உணர்வு மிக முக்கியமானது. ஆனால் யுவராஜின் கால் நகர்த்தல்கள் கூட நல்ல அறிகுறியை காட்டுகிறது. ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரர் என்றால் என்னைப் பொறுத்தவரை இம்முறை இந்திய அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா என்று கூறத் தோன்றுகிறது.

அவரது பந்துவீச்சு முறை ஒருமாதிரியான சாதுரியமான பந்து வீச்சு முறை கொண்டது. பார்ப்பதற்கு மெதுவாக வீசுவது போல் தெரிந்தாலும் பேட்டில் பந்து படும் போது அவ்வாறு அல்ல என்பது தெரிகிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் அதன் பலம் என்னவெனில் அணியின் உத்தியில் எதிர்பார்க்கக் கூடிய வகைமாதிரி எதுவும் இல்லை. யுவராஜ், தோனி தங்களது பேட்டிங் ஆர்டரை மாற்றிக் கொள்கின்றனர். அதே போல் அஸ்வின் தொடக்க ஓவரை வீசுகிறார். அணியின் சமநிலை அருமையானது. எனவே ஏப்ரல் 3, 2016-ல் நிகழும் கொண்டாட்டங்கள் ஏப்ரல் 2, 2011 கொண்டாட்டங்களிலிருந்து வேறுபட்டதாக இருக்காது என்று நான் கருதுகிறேன்.

ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு அவ்வளவு வலுவாக இல்லை. ஆனாலும் பரவாயில்லை போல் உள்ளது. பேட்டிங்தான் அந்த அணியின் பலம். முக்கியப் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா சரியாக ஆடுவதில்லை, ஆனால் அவர்களிடம் டிவில்லியர்ஸ் உள்ளார். இங்கிலாந்து அணியில் சில சிறந்த டி20 வீரர்கள் உள்ளனர். அவர்களது பந்து வீச்சு என்னை கவர்கிறது.

மொயீன் அலி போன்ற மூளையை பயன்படுத்தும் பவுலர் உள்ளார். அவர் பந்தை சரியாக இடத்தில் பிட்ச் செய்து விக்கெட் எடுக்கிறார் என்பது மட்டுமல்ல அவர் ஒரு திறமையான உத்தியைக் கையாள்கிறார். அதே போல் லெக்ஸ்பின்னர் அடில் ரஷீத் அவர் இன்னும் கொஞ்சம் மெதுவாக வீச வேண்டும், பந்தை தள்ளக்கூடாது. இந்திய அணி எந்த அணியைக் கண்டும் அஞ்சவில்லை என்றாலும் இங்கிலாந்துக்கு எதிராக எச்சரிக்கை தேவை என்றே கருத வேண்டியுள்ளது.

இப்போதைய இந்திய அணி விளையாடும் மனநிலை சரியானதாக உள்ளது. வெற்றி பெறும் தன்னம்பிக்கை இல்லாமல், என்ன அணிச்சேர்க்கையில் ஆடுவது என்பதில் ஐயங்களுடன் உள்ள அணி அல்ல இந்திய அணி.

இவ்வாறு கூறினார் சச்சின் டெண்டுல்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x