

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை நடைபெறும் ஆட்டம் தனது கடைசி ஆட்டமாக இருக்கும் என அப்ரீடி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் முடிவில் கூறும்போது, நடு ஓவர்களை நியூஸிலாந்து ஓவர்கள் சிறப்பாக வீசினர். முதல் 6 ஓவர்களில் அருமையாக விளையாடிய நாங்கள் அதன்பிறகு சிறப்பாக விளையாடவில்லை. ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் எடுத்தால் போதும் என்ற நிலையில் கூட சிறப்பாக செயல்பட தவறினோம்.
பந்தை நாங்கள் அடித்து விளையாடவும், பவுண்டரிக்கு விரட்டவும் முயற்சி செய்தோம். ஆனால் அதேவேளையில் அதிக பந்துகளை வீணடித்துவிட்டோம். செய்த தவறையே மீண்டும் செய்கிறோம். எல்லா ஆட்டத்திலும் இது நிகழ்கிறது. நியூஸிலாந்து ஆட்டத்தின் முடிவை மறந்துவிட்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கவனம் செலுத்து வோம். இந்த ஆட்டம் எனது கடைசி ஆட்டமாக இருக்கும்.
இவ்வாறு அப்ரீடி கூறினார்.
ஆசியக் கோப்பையில் இந்திய அணியிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி டி 20 உலகக் கோப்பையிலும் தோல்வியை சந்தித்தது. அப்போதே மிகுந்த நெருக்கடிக்கு ஆளானார் அப்ரீடி. தற்போது நியூஸிலாந்து அணியிடம் ஏற்பட்ட தோல்வியால் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது.
தொடர் தோல்விகளால் டி 20 உலகக் கோப்பைக்கு பின்னர் அப்ரீடியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கும் முடிவுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் தான் தனது கடைசி டி 20 ஆட்டமாக இருக்கும் என அப்ரீடி தெரிவித்துள்ளதால் ஆட்டத்தின் முடிவில் அவர் ஓய்வு முடிவை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
சர்ச்சையில் அப்ரீடி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகித் அப்ரீடி, இந்திய ரசிகர்கள் தங்கள் மீது பாகிஸ்தான் ரசிகர்களை விட அதிக அன்பு செலுத்துவதாக கூறி ஏற்கெனவே சர்ச்சையில் சிக்கியிருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள் ளார்.
மொஹாலியில் நேற்று முன் தினம் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் போடப்பட்ட பிறகு, வர்ணணையாளரான ரமீஸ் ராஜா, அப்ரீடியிடம் உங்களுக் கும், உங்கள் அணிக்கும் இங்கு ரசிகர்களின் ஆதரவு இருக்குமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அப்ரீடி, "ஆமாம் நிறைய பேர் ஆதரவு அளிக்கின்றனர். இங்கு வந்து இருக்கும் ரசிகர்கள் பெரும்பாலோ னார் காஷ்மீரில் இருந்து வந்திருக்கின்றனர். கொல்கத்தா மக்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்களும் எங்களுக்கும் ஆதரவு அளித்தனர்" என்றார்.
இந்நிலையில் இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் அணுராக் தாகூர் கூறும்போது, "அரசியல் ரீதியாக இதுபோன்ற அறிக் கைகள் சரியானது இல்லை. வீரர்கள் இதில் இருந்து விலகியே இருக்க வேண்டும். பாகிஸ்தானி லேயே அப்ரீடி விமர்சிக்கப்படு வதற்கு இது தான் காரணம்" என்றார்.