Published : 17 Nov 2021 03:05 AM
Last Updated : 17 Nov 2021 03:05 AM

நியூஸிலாந்துடன் டி 20-ல் இன்று மோதல்: ரோஹித் சர்மா, ராகுல் திராவிட் கூட்டணியில் களமிறங்கும் இந்திய கிரிக்கெட் அணி

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டி 20 ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. ரோஹித் சர்மா, ராகுல் திராவிட் கூட்டணியில் இந்த போட்டியை சந்திக்கிறது இந்திய அணி.

நியூஸிலாந்து அணி 3 டி 20 ஆட்டம், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டி 20 ஆட்டம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.

டி 20 உலகக் கோப்பை இறுதி ஆட்டம் முடிவடைந்த இரு நாட்களில் நியூஸிலாந்து அணி, இந்திய தொடரை அணுகுவதால் கேப்டன் வில்லியம்சன் டி 20 தொடரில் கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிம் சவுதி இன்றைய ஆட்டத்தில் அணியை வழிநடத்த உள்ளார்.

அதேவேளையில் இந்தத் தொடரில் இந்தியா டி 20 அணியின் புதிய கேப்டனான ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. மேலும் பயிற்சியாளராக ராகுல் திராவிட்டுக்கு இது முதல் தொடர் என்பதால் இந்த கூட்டணி மீது எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் இந்த கூட்டணியே 2022-ம் ஆண்டுஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பைக்கான அணியை கட்டமைக்க உள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது ஷமி, ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஐபிஎல்தொடரில் சிறப்பாக செயல்பட்டவெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷால் படேல்,அவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் மிதவேகப்பந்து வீச்சுஆல்ரவுண்டரான வெங்கடேஷ் ஐயர், அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக கருதப்படுகிறார். சுழற்பந்து வீச்சில் யுவேந்திர சாஹல்மீண்டும் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

அணியில் தொடக்க வீரர்கள் மட்டும் 5 பேர் உள்ளனர். அனேகமாக இன்றைய ஆட்டத்தில் தொடக்க ஜோடியில் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது. பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் தனதுதிறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

அஸ்வின் தனதுஇடத்தை தக்க வைத்துக்கொள்வதில் முனைப்பு காட்டக்கூடும். டி 20 உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்திடம் அடைந்த தோல்வியின் காரணமாகவே இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்திருந்தது. இதற்கு இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x