Published : 16 Jun 2014 04:26 PM
Last Updated : 16 Jun 2014 04:26 PM

கோமாவிலிருந்து மீண்டார் ஃபார்முலா 1 நட்சத்திரம் ஷூமாக்கர்

ஃபார்முலா 1 கார்பந்தயத்தின் நட்சத்திர வீரர் மைக்கேல் ஷூமாக்கர் கோமாவிலிருந்து மீண்டு நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.

இந்தத் தகவலை அவரது குடும்பத்தினர் இன்று வெளியிட்டனர். மேலும் அவரது ஆரோக்கியம் சீரடைய மறுவாழ்வு சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் கிழக்கு பிரான்சில் உள்ள க்ரினோபிள் என்ற இடத்தில் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றார். அவரது குடும்பத்தினர் ஷூமாக்கருக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, அவருக்கு இரவும் பகலும் அயராது சிகிச்சை அளித்து மீட்ட மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் அவர் பிரான்சில் உள்ள மெரிபெல்லில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது கீழே விழுந்து பாறையில் மோதிக்கொண்டார். அதில் தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு கோமாவில் வீழ்ந்தார். சுமார் 60கிமீ வேகத்தில் அவர் அன்று சென்றதாக விசாரணையில் தெரியவந்தது. பாறையில் மோதிய வேகத்தில் அவரது தலைக்கவசமே இரண்டாக உடைந்தது.

இப்போது அவர் கோமாவிலிருந்து மீண்டு விட்டாலும் பழைய நிலைமைக்கு அவர் திரும்புவதற்கு நீண்ட கால மறுவாழ்வு சிகிச்சைத் தேவைப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மைக்கேல் ஷூமாக்கர்...

மைக்கேல் ஷூமாக்கர் 1990-களில் ஃபார்முலா 1 போட்டியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருந்த போதுதான் இந்தியத் தொலைக்காட்சிகளில் ஃபார்முலா 1 கார் பந்தயம் ஒளிபரப்பானது. அதுதான் இந்திய ரசிகர்களின் இதயத்தில் ஷூமாக்கர் இடம்பிடிக்கக் காரணமானது. ஒன்றல்ல, இரண்டல்ல... 7 முறை பட்டம் வென்று ஃபார்முலா 1 உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ஷூமாக்கர், இன்றளவிலும் உலகின் தலைசிறந்த ஃபார்முலா 1 வீரராக போற்றப்படுகிறவர். கண் இமைக்கும் நேரத்தில் கார்கள் கடந்து செல்லும் இந்த ஃபார்முலா 1 போட்டியில் நிகழ்த்தப்பட்டிருக்கும் சாதனைகளில் பெரும்பாலானவை ஷூமாக்கருக்கு சொந்த மானவையே.

ஃபார்முலா 1 போட்டியில் அதிக முறை (7) சாம்பியன் பட்டம் வென்றவர், அதிக ரேஸில் (91) வெற்றி பெற்றவர், அதிகமுறை (77) 'ஃபாஸ்டஸ்ட் லேப்' சாதனை, அதிகமுறை (68) முதல் வரிசையில் இருந்து புறப்பட்டவர், அதிக ரேஸ்களில் (308) பங்கேற்றவர், அதிகமுறை (155) முதல் 3 இடங்களுக்குள் வந்தவர், ஓர் ஆண்டில் அதிக ரேஸ்களில் (13) வெற்றி பெற்றவர், ஒரு சீசனில் எல்லா ரேஸ்களிலும் முதல் 3 இடங்களுக்குள் பிடித்த ஒரே வீரர் என ஷூமாக்கரின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

2012-ல் கார் பந்தயத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு சாகச விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வந்த ஷூமாக்கர், பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது பாறையில் மோதி விபத்துக்குள்ளானார்.

தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் பூரண குணமடைய உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வேளையில், அவர் மீண்டிருப்பது குறித்த செய்தி அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையவாசிகள் தங்களது மகிழ்ச்சியை ட்விட்டர், ஃபேஸ்புக் மூலம் பகிர்ந்தவண்ணம் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x