

இந்திய அணியின் டி20 போட்டிக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ள விராட் கோலி, விரைவில் டி20 போட்டிகளில் இருந்தே ஓய்வு பெறுவார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முஷ்டாக் அகமது தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை போட்டியுடன் இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் நியூஸிலாந்து தொடருக்கு இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி அடுத்தடுத்து மாற்றங்களை நோக்கி நகர்ந்து வருகிறது
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முஷ்டாக் அகமது, இந்திய அணியின் தற்போதைய சூழலைப் பார்த்து, விரைவில் டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுவார் எனக் கணித்துள்ளார்.
பாகிஸ்தானில் ஒளிபரப்பாகும் ஜியோ சேனலுக்கு முஷ்டாக் அகமது அளித்த பேட்டியில் கூறியதாவது:
''வெற்றிகரமான கேப்டனாக வலம் வரும் கோலி, கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன் எனக் கூறுவதன் அர்த்தம், அணியின் ஓய்வறையில் ஏதும் சரியில்லை என அர்த்தம். எனக்குத் தெரிந்தவரை, இந்திய ஓய்வறையில் இரு குழுக்கள் இருக்கின்றன. டெல்லி குழு, மும்பைக் குழு எனப் பிரிந்துள்ளன.
இந்தச் சூழலில், கோலியால் இனிமேல் தொடர்ந்து டி20 போட்டிகளி்ல் விளையாட முடியாது. ஆதலால், விரைவில் டி20 போட்டிகளில் இருந்து கோலி விரைவில் ஓய்வு அறிவிப்பார் என நினைக்கிறேன். இருப்பினும், தொடர்ந்து ஐபிஎல் தொடரில் தொடர்ந்து கோலி விளையாடுவார்.
ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் அதிகமான ஆர்வம் காட்டியதால்தான், டி20 உலகக் கோ்பபை போட்டியில் கோட்டைவிட்டார்கள். உலகக் கோப்பை போட்டிக்கு முன்புவரை ஓய்வில்லாமல் தொடர்ந்து பயோ பபுள் சூழலில் இந்திய வீரர்கள் இருந்ததால், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சலிப்படைந்து, சோர்வடைந்தது தோல்விக்கு முக்கியக் காரணம்” எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணிக்காக 1989 முதல் 2003 வரை ஆடிய முஷ்டாக் அகமது சிறந்த லெக் ஸ்பின்னர், 52 டெஸ்ட், 144 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.