

முதல் தர அணிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் அயர்லாந்து அணிக்கே நேற்று அதிர்ச்சியளித்தது ஓமன் அணி. உலகக்கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது ஒமன்.
தரம்சலாவில் நடந்த உலகக்கோப்பை டி20 தகுதிச் சுற்றுப் போட்டியில் கடைசி ஓவரில் சோரென்சன் சொதப்ப ஓமன் அணிக்கு எதிர்பாராத வெற்றி கிட்டியது.
முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஓமன் அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து அதிர்ச்சி வெற்றி பெற்றது.
ஓமன் வெற்றிக்கு கடைசி ஓவரில் தேவை 14 ரன்கள். அயர்லாந்தின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் சோரென்சன் கையில் பந்து. முதல் பந்தே தலை உயரத்திற்கு ஃபுல்டாஸ், நோ-பால், அதனை அமிர் அலி ஃபைன் லெக்கில் பவுண்டரி அடித்தார்.
அடுத்த ஃப்ரீ ஹிட் பந்து யார்க்கராக அமைய பவுல்டு ஆனது, ஆனால் ஒரு ரன் ‘பை’ ஓடிவிட்டனர். பேட்டிங் முனைக்கு ஓமன் வீரர் லால்சீட்டா வந்தார். வைடான புல்டாஸை தேர்ட் மேன் திசையில் பவுண்டரி விளாசினார். அடுத்த பந்தில் ஒரு ரன்; இப்போது 3 பந்துகளில் வெற்றிக்குத் தேவை. ஆனால் அடுத்த பந்தில் அமிர் அலி விக்கெட் கீப்பர் ஓபிரையனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
2 பந்துகள் 3 ரன்கள் என்ற நிலையில் சோரென்சன் மீண்டும் ஒரு ஹை புல்டாஸை வீச அது பேட்ஸ்மெனையும், விக்கெட் கீப்பரையும் தாண்டி பவுண்டரிக்குப் பறந்தது. நோ-பால், 5 ரன்கள்.. ஓமன் வெற்றிக் கொண்டாட்டம். சாதாரண உள்ளூர் லீக் போட்டிகளில் கூட நோ-பால்-பை-யில் எந்த அணியும் வெற்றி பெற்றிருக்குமா என்பது சந்தேகமே. ஆனால் சோரென்சனின் இந்தப் பந்து பலருக்கும் அதிர்ச்சியளித்தது.
இதற்கு முன்னதாகவும் அயர்லாந்துக்கே வெற்றி வாய்ப்பு இருந்தது, காரணம் 95/5 என்ற நிலையில் ஓமன் வெற்றிக்குத் தேவை 31 பந்துகளில் 61 ரன்கள். ஆனால் 15-வது ஓவரில் சோரென்சனின் கடைசி பந்தில் அமீர் அலி, லெக் திசை பந்தை மிட்விக்கெட்டில் பெரிய சிக்ஸ் ஒன்றை அடித்தார்.
101/5 என்ற நிலையில், 16-வது ஓவரை ஸ்டர்லிங் வீச ஓமன் வீரர் ஜதீந்தர் சிங் ஒரு பவுண்டரியையும், அமீர் அலி ஒரு பவுண்டரியையும் அடித்தனர். இந்த இரண்டு பந்துமே மோசமான லெக் திசை பந்துகள். இந்த ஓவரில் 11 ரன்கள் வந்தது.
17-வது ஓவரை முர்டாக் மோசமாக வீசினார் நோபால்களும் வைடுகளுமாக அமைந்த அந்த ஓவரில் அமீர் அலி கடைசி 3 பந்துகளில் 3 பவுண்டரிகளை விளாசினார், மிகவும் சாதுரியமாக அயர்லாந்து பவுலரை அவர் ஏமாற்றினார். 19-வது ஓவரில் 24 ரன்கள் எடுத்த ஜதீந்தர் சிங் ஆட்டமிழந்தார். ஆனால் அமீர் 17 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் அடித்த 32 ரன்களும், சோரென்சனின் மோசமான கடைசி ஓவரும் ஓமன் வெற்றியை உறுதி செய்தன.
இதற்கும் முன்னதாக ஓமன் அணியின் தொடக்க வீரர்களான சீஷான் மக்சூத் (38), கவார் அலி (34) ஆகியோர் 8.3 ஓவர்களில் 69 ரன்கள் என்ற அதிரடித் தொடக்கம் கொடுத்தனர். ஆனால் இருவரையும் கெவின் ஓ பிரையன் பவுல்டு செய்ய அத்னன் இலியாஸ், மெஹ்ரன் கான், ஆமீர் கலீம் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 14-வது ஓவர் முடிவில் 90/5 என்று ஆனது. இந்நிலையிலிருந்துதான் அமீர் அலி தனது அதிரடி 32 ரன்களினால் வெற்றி பெறச் செய்தார்.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி போர்ட்டர்பீல்ட், பால் ஸ்டர்லிங் மூலம் நல்ல தொடக்கம் கண்டது, இருவருமே 29 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில் ஸ்டர்லிங்கிற்கு ஓமன் வீரர் மக்சூத் எக்ஸ்ட்ரா கவரில் பிடித்த ஒரு கை கேட்ச் அனைவரையும் ஆடிப்போகச் செய்தது. வில்சன் 38 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார். நியால் பிரையன், கெவின் பிரையன் முறையே 16, 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஓமன் தரப்பில் அன்சாரி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அயர்லாந்து 154/5 என்று முடிந்தது.
ஆட்ட நாயகனாக அமீர் அலி தேர்வு செய்யப்பட்டார். ஓமன் அணிக்கு 2 புள்ளிகள்.