டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை: ஆப்கானிஸ்தான் போராடி தோல்வி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.
தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்று நடந்தது. டாஸில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 229 ரன்களைக் குவித்த தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் நேற்றைய ஆட்டத்திலும் ருத்ர தாண்டவம் ஆடினர். டி காக் (31 பந்துகளில் 45 ரன்கள்), டிவில்லியர்ஸ் (29 பந்துகளில் 64 ரன்கள்), டூ பிளெஸ்ஸி (27 பந்துகளில் 41 ரன்கள்) ஆகியோரின் மிரட்டல் பேட்டிங்கால் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை எடுத்தது.
கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் இந்த ஸ்கோரைப் பார்த்து மலைத்து நிற்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எண்ணத்தை தவிடுபொடியாக்கும் வண்ணம் அந்த அணியின் வீரர்கள் மட்டையைச் சுழற்றினர். ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான முகமது ஷஸாத் 19 பந்துகளில் 44 ரன்களை விளாச நிலைகுலைந்து போனது தென் ஆப்பிரிக்கா.
9.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை கடந்த ஆப்கானிஸ்தான், சிறிது நேரம் தென் ஆப்பிரிக்காவின் கண்களில் தோல்வி பயத்தைக் காட்டியது. ஆனால் மிகப்பெரிய ஸ்கோர்களை துரத்துவதில் அனுபவம் இல்லாத காரணத்தால் அந்த அணி கொஞ்சம் கொஞ்சமாக தனது பிடியை தளர்த்தியது. குல்பாதின் (26 ரன்கள்), ஷென்வாரி (25 ரன்கள்), முகமது நபி (11 ரன்கள்), ஸத்ரான் (12 ரன்கள்) என்று முன்னணி வீரர்கள் பலரும் வெளியேற 20 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இப்போட்டியில் 27 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க வீரர் மோரிஸ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
