Last Updated : 07 Nov, 2021 08:14 AM

 

Published : 07 Nov 2021 08:14 AM
Last Updated : 07 Nov 2021 08:14 AM

வெற்றி பெற்றும் அரையிறுதி ராசியில்லாத தென் ஆப்பிரிக்கா: கடைசி ஓவரில் ஆட்டத்தை திருப்பிய ரபாடா: டூசன், மார்க்ரம் காட்டடி ஆட்டம்


ரபாடாவின் ஹாட்ரிக் விக்கெட், டூசென், மார்க்ரம்மின் காட்டடி ஆட்டம் ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்க அணி.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில்2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்்த்தது. 190 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில்8 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்து 10 ரன்களில் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து அணியும், ஆஸ்திேரலிய அணியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்

தென் ஆப்பிரிக்க அணி இந்தப் போட்டியில் வெற்றி ெபற்றபோதிலும் அரையிறுதிக்குச் செல்ல முடியாத நிலைதான் ஏற்பட்டது. அரையிறுதிக்குச் செல்ல வேண்டுமென்றால் இங்கிலாந்து அணியை 131 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் என்ற இலக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயி்க்கப்பட்டது.

ஆனால், இங்கிலாந்து அணியை 131 ரன்களுக்குள் சுருட்ட முடியவில்லை என்ற நிலைவந்தபோதே, ஆஸ்திரேலிய அணி நிகர ரன்ரேட் அடிப்படையில், அரையிறுதிக்குச் சென்றது. ஆனாலும் கடைசிவரை மனம்தளராமல் போராடி இங்கிலாந்து வென்றது தென் ஆப்பிரிக்க அணி.

குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திேரலியா, தென் ஆப்பிரிக்க அணிகள் சரிசமமாக 8 புள்ளிகள் எடுத்திருந்தபோதிலும், ரன்ரேட் அடிப்படையில் இங்கிலாந்து, ஆஸ்திேரலிய அணிகள் அரையிறுதிக்குள் சென்றன.

குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணி ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. ஆதலால், அரையிறுதியில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் மோதுவது உறுதியாகிவிட்டது.

இதில் இங்கிலாந்து அணியுடன் எந்த அணி மோதுவது என்பது இன்னும் தெரியவி்ல்லை. நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி வென்றால் நியூஸிலாந்து அணி அரையிறுதிக்குள் செல்லும். ஒருவேளை ஆப்கன் வென்றால், இந்திய அணி, நமிபியா அணியை நல்ல ரன்ரேட்டில் வெல்லும் பட்சத்தில் இந்திய அணிக்கு வாய்ப்புள்ளது. இந்திய அணியின் ரன்ரேட்டும் மோசமாக இருந்தால், ஆப்கானிஸ்தான் கூட அரையிறுதிக்குச் செல்லலாம்.

தென் ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன் ராசி வேன் டெர் டூசென் 60 பந்துகளில் 94 ரன்கள்(6சிக்ஸர்,5பவுண்டரி) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணி ஸ்கோர் உயர்வுக்குக் முக்கியக் காரணமாக அமைந்த டூசனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் கிப்ஸ் 90 ரன்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

மற்றொரு வீரர் எய்டன் மார்க்ரம் 25 பந்துகளில் 52 ரன்கள்(4சி்க்ஸர்,2பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரும் சேர்ந்து 3-வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்கோர் உயர்வுக்கு இருவரும் முக்கியக் காரணமாகும்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. ரபாடா வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தில் கிறிஸ்வோக்ஸ்(6) அடித்தபந்தை மிட்ஆப் திசையில் நோர்க்கியா கேட்ச் பிடித்தார், 2-வந்தை கேப்டன் மோர்கன்(17) ஸ்குயர் லெக் திசையில் தூக்கி அடிக்க மகராஜ் கேட்ச் பிடித்தார்.

3-வது பந்தை சந்தித்த ஜோர்டன் லாங்-ஆன் திைசயில் தூக்கியடிக்க மில்லர் கேட்ச் பிடிக்க ஹாட்ரிக் விக்கெட்டை ரபாடா கைப்பற்றினார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ரபாடாதான்.

தென் ஆப்பிரிக்க அணிக்கும் அரையிறுதிச் சுற்றுக்கும் ராசியில்லை என்ற சென்டிமென்ட் காலம்காலமாக நீடித்து வருகிறது. ஐசிசி போட்டித் தொடர் என்றாலே தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதிக்குள் செல்லமாட்டார்கள், அவ்வாறு சென்றாலும் அரையிறுதியில் பரிதாபமாகத் தோற்று வெளியேறுவார்கள்.

இதுதான் கடந்த கால வரலாற்றில் திறமையான இந்த அணிக்கு கிடைத்த பரிசாக இருந்து வருகிறது.
இந்த போட்டித் தொடரில் புதிய கேப்டன் பவுமா தலைமையில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக ஆடியது. இளம் வீரர் பவுமாவும் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக வீரர்களைப் பயன்படுத்தி அணி வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்தார். ஹன்சி குரோனியே, ஸ்மித், டூப்பிளசிஸுக்குப்பின் நல்ல கேப்டனாக பவுமா கிடைத்துள்ளார்.

முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் கூடுதலாக ரன்கள் அடித்து நெருக்கடி கொடுத்து தோற்றிருந்தால்கூட ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தென் ஆப்பிரிக்கா சென்றிருக்கும்.
ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் ஆட்டத்தில் மோசமாக தோல்வி அடைந்ததால் ரன்ரேட் மோசமாக அடிவாங்கியது. ஆனால், மற்ற 4 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணி சிறப்பாக ஆடி வெற்றி பெற்றனர், இருப்பினும் ரன்ரேட் காரணமாக அவர்களுக்கான இடம் கிைடக்கவில்லை.

கடந்த 2019ம் ஆண்டு 50 ஓவர்கள் உலகக் கோப்பை தென் ஆப்பிரிக்காவுக்கு மோசமாக அமைந்து லீ்க்சுற்றிலேயே வெளியேறினார்கள். ஆனால், டி20 உலகக் கோப்பையில் நல்ல கிரிக்கெட்டை விளையாடி, கடுமையான போட்டியளித்துதான் அரையிறுதிக்குத் தகுதிபெற முடியாமல் தென்ஆப்பிரிக்க அணியினர் வெற்றியுடனே வெளியேறுகிறார்கள்.

அதிலும் குரூப்-1 பிரிவில் தோல்வி அடையாமல் சென்ற இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றியுடனே தென் ஆப்பிரிக்க அணி தலைநிமிர்ந்து செல்வதால் எந்தவருத்தமும் தேவையில்லை.
தென் ஆப்பிரிக்க அணிக்கு நீண்டகாலத்துக்குப்பின் அனைத்துப் பிரிவுகளிலும் சமநிலை கொண்ட வீரர்கள் கிடைத்துள்ளார்கள். அனுபவ வீரர் டீகாக்,ஹென்ரிக்ஸ், டூசென், மார்க்ரம், கேப்டன் பவுமா,மில்லர், பிரிட்டோரியஸ் வரை பேட்டிங்கில் நன்றாகவே செயல்படுவார்கள்.

பந்துவீச்சில் ரபாடா, நோர்க்கியா, பிரிட்டோரியஸ் என 3 வேகப்பந்துவீச்சாளர்கள், ஷாம்ஸி, மகராஜ் என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் என வலிமையான அணியாகவே இருக்கிறது. இந்த உலகக் கோப்பையை வாய்ப்பை இழந்தாலும், ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பையில் நிச்சயம் பெரிய சவாலாக தென் ஆப்பிரிக்க அணி இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை தொடக்க வீரர்களில் ஹென்ரிக்ஸ் 2 ரன்னில் மொயின் அலி பந்துவீச்சில் விரைவாகவே ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு குயின்டன் டீ காக், டூசென் இருவரும் நல்ல ஸ்கோர் செய்தனர். 2-வதுவிக்கெட்டுக்கு இருவரும், 71 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். டீகாக் 34 ரன்னில் ரஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு மார்க்ரம், டூசென் ஜோடிதான் ரன்ரேட்டை ராக்கெட் வேகத்துக்கு உயர்த்தினர். 10 ஓவர்கள்வரை தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள்தான் சேர்த்திருந்தனர். ஆனால், அடுத்த 10 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி, 126ரன்கள் சேர்த்தனர். டூசென் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார் அதன்பின் பேட்டிங்கில் அனல் பறந்தது.

12 ஓவரிலிருந்து மார்க்ரம், டூசென் இருவரும் ஓவருக்கு குறைந்தபட்சம் ஒரு சிக்ஸராவது விளாசத் தவறவில்லை. வோக்ஸ் வீசிய 16-வது ஓவரில் டூசென் இரு சிக்ஸர்களும், மார்க்ரம் ஒரு சிக்ஸர் என மொத்தம் 21 ரன்கள் சேர்த்தனர். ஜோர்டன் வீசிய கடைசி ஓவரிலும்இரு சிக்ஸர் என 15 ரன்கள் விளாசினர். அதிரடியாக ஆடிய மார்க்ரம் 24 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். டூசென் 94 ரன்களுடனும், மார்க்ரம் 52 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

190 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஜேஸன்ராய், பட்லர் ஆட்டத்தைத் தொடங்கினர். ஜேஸன் ராய் நன்றாக பேட் செய்தநிலையில் காலில் தசைப்பிடிப்புக் காரணமாக 20 ரன்னில் வெளியேறினார். அவருக்கு தசைப்பிடிப்புகாயம் பெரிதாக இருப்பதால், அரையிறுதியில் களமிறங்குவது சந்தேகம் எனத் தெரிகிறது.

அடுத்துவந்த மொயின் அலி, பட்லருடன் சேர்ந்தார். சிறிது நேரமே நிலைத்த பட்லர் 26 ரன்னில் நோர்க்கியா பந்துவீச்சில் விக்ெகட்டை இழந்தார். கடந்த இரு போட்டிகளிலும் சதம், அரைசதம் விளாசிய பட்லர் இதில் ஏமாற்றினார். அடுத்துவந்த பேர்ஸ்டோ ஒரு ரன்னில் ஷாம்ஸி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

4வது விக்கெட்டுக்கு மொயின் அலி, டேவிட் மலான் ஓரளவுக்குத் தாக்குப்பிடித்து விளையாடினர். மொயின் அலி 37 ரன்கள் சேர்த்தநிலையில் ஷாம்ஸி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் சேர்ந்து 4-வுது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதன்பின் டேவிட் மலான்(33) ரன்னில் பிரிட்டோரியஸ் பந்துவீச்சிலும் லிவிங்ஸ்டன்(28) ரன்னில் பிரிட்டோரியஸ் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர்.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் வோக்ஸ், மோர்கன் அதிரடியாக ஆடத் தொடங்கியதும், தேவைப்படும் ரன்ரேட் குறையத்தொடங்கி, வெற்றியை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. ரபாடா பந்துவீசினார். ஏற்கெனவே ரபாடா 3 ஓவர்கள் வீசி 45 ரன்கள் வாரிவழங்கியதால், என்ன நடக்குமோ என்ற பதற்றம் நிலவியது.

களத்தில் மோர்கன், வோக்ஸ் இருந்தனர். ரபாடா வீசிய முதல்பந்தில் வோக்ஸும்,2-வது பந்தில் மோர்கனும்,3-வதுபந்தில் ஜோர்டனும் ஆட்டமிழக்க ரபாடா ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தனார். அதன்பின் ரஷித் 2 ரன்களுடனும், மார்க் உட் ஒரு ரன் ேசர்க்க இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளையும், ஷாம்ஸி, பிரிட்டோரிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x