Published : 06 Nov 2021 03:54 PM
Last Updated : 06 Nov 2021 03:54 PM

இந்திய அணி ஃபைனலுக்கு வர வேண்டும்; பாகிஸ்தான் மீண்டும் தோற்கடித்து கோப்பையை வெல்ல வேண்டுமாம்: ஷோயப் அக்தரின் ஆசை

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் | கோப்புப் படம்.

லாகூர்

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டும், இந்திய அணி பாகிஸ்தானால் மீண்டும் தோற்கடிக்கப்பட்டு, கோப்பையை நாங்கள் வெல்ல வேண்டும் என்பது எனது தனிப்பட்ட ஆசை என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடமும், 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்திடமும் தோல்வி அடைந்தது. ஆனால், ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகளை அபாரமாக வீழ்த்தி தற்போது 4 புள்ளிகளுடன் ரன் ரேட்டில் 2-வது இடத்தில் இந்திய அணி இருக்கிறது.

இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கருகிவிடவில்லை. ஆப்கானிஸ்தான், நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நாளை நடக்கும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வென்றுவிட்டால், நமிபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி நல்ல ரன் ரேட்டில் வெல்லும் பட்சத்தில் அரையிறுதிக்குச் செல்ல முடியும். ஒருவேளை ஆப்கானிஸ்தானை நியூஸிலாந்து அணி வென்றுவிட்டால், இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கருகிவிடும்.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தனது யூடியூப் சேனலில் இந்திய அணியின் தோல்வி குறித்துப் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

''தனிப்பட்ட முறையில் என்னுடைய ஆசை, இந்திய அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று பாகிஸ்தானுடன் மோத வேண்டும். இந்திய அணியை மீண்டும் பாகிஸ்தான் அணி வென்று டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்ற வேண்டும். இவ்வாறு நடந்தால் உலகக் கோப்பை கிரிக்கெட் இன்னும் பெரிய அளவுக்குக் கொண்டு செல்லப்படும்.

இந்திய அணியின் உலகக் கோப்பை பயணம் முதல் இரு தோல்விகளுடன் முடிந்துவிடவில்லை என்று நான் தொடக்கத்திலேயே கூறினேன். இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிடவில்லை.

பாகிஸ்தான் அணியினர் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றி யோசிக்கக் கூடாது. பாகிஸ்தான் அணியின் பணி ஸ்காட்லாந்து அணியை வெல்வதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

எனக்கு ஒரு விஷயம் மீண்டும் நடக்க வேண்டும். இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மீண்டும் மோத வேண்டும். ஏன் இறுதிப் போட்டியில்கூட இரு அணிகளும் மோதக்கூடாது. அவ்வாறு நடக்கவும் வாய்ப்புள்ளது. இரு தோல்விகளுக்குப் பின் காயம்பட்ட புலியாக இந்திய அணி இருக்கிறது. இந்திய அணி தங்களுக்கு அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிடவில்லை, உயிர்ப்புடன் இருக்கிறோம் என நம்புகிறார்கள்.

நியூஸிலாந்து அணி சரியாக விளையாடாமல் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்துவிட்டால் பல கேள்விகள் எழும், ஏராளமான ஊகங்களும் எழக்கூடும் என எச்சரிக்கிறேன். இப்போது இந்தியாவின் தலைவிதி நியூஸிலாந்து அணியிடம் இருக்கிறது. சமூக ஊடகத்தில் நியூஸிலாந்து தோல்வி மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி ட்ரெண்டாகும். நான் எந்த சர்ச்சைக்கும் செல்லவில்லை.

ஆப்கானிஸ்தான் அணியைவிட நியூஸிலாந்து அணி சிறந்தது. நியூஸிலாந்து நன்றாக விளையாடி கடவுள் அவர்களின் வெற்றியைத் தடுத்தால், நிச்சயம் அது பிரச்சினையாகும். சமூக ஊடகத்தில் பெரும் விவாதப்பொருளாவதை யாராலும் தடுக்க முடியாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்''.

இவ்வாறு அக்தர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x