Last Updated : 06 Nov, 2021 03:01 PM

 

Published : 06 Nov 2021 03:01 PM
Last Updated : 06 Nov 2021 03:01 PM

மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கிளம்ப வேண்டியதுதான்: உண்மையை ஒப்புக்கொண்ட ஜடேஜா

ஆட்ட நாயகன் விருது வென்ற ரவிந்திர ஜடேஜா | கோப்புப்படம்

துபாய்

ஆப்கானிஸ்தானை நியூஸிலாந்து வீழ்த்திவிட்டால் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு புறப்படுவோம் என்று இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா தெரிவித்தார்.

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி, 17.4 ஓவர்களில் 85 ரன்களில் ஆட்டமிழந்தது. 86 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணிக்குக் கிடைத்த வெற்றிதான் என்றாலும் பெருமைப்படத்தக்க வெற்றி என்று சொல்லிவிட முடியாது. இந்தப் போட்டியில் நிச்சயம் இந்திய அணி தோற்காது என்பது ரசிகர்களுக்குத் தெரிந்துவிட்டது. ஒரு போட்டியின் முடிவைத் தெரிந்துகொண்டு ஆட்டத்தைப் பார்ப்பது சுவாரஸ்யம் அற்றதாகவே இருக்கும்.

அதுபோல்தான் நேற்றைய ஆட்டமும் இருந்தது. ஸ்காட்லாந்து அணியைக் குறைந்த ஸ்கோரில் சுருட்டி, இந்திய அணியினர் குறைந்த ஓவரில் சேஸிங் செய்வார்கள் என்று எழுதி வைக்கப்படாமல் போட்டி தொடங்கியது. அதைப் போலவே அனைத்தும் இனிதாக நடந்து முடிந்தன.

இந்திய அணிக்குத் தொடர்ந்து கிடைத்த 2-வது வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி பட்டியலில் 4 புள்ளிகளுடன் 1.619 ரன் ரேட்டுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி 2-வது இடத்தில் இருந்தாலும் புள்ளிகள் அடிப்படையில் நியூஸிலாந்து அணிதான் 2-வது இடத்தில் இருக்கிறது.

இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கருகிவிடவில்லை, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆட்டத்தைப் பொறுத்துதான் இந்திய அணியின் அரையிறுதி வாழ்வு அமைந்துள்ளது. ஒருவேளை நியூஸிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி வென்றுவிட்டால் மட்டுமே இந்திய அணி அரையிறுதி வாய்ப்பு குறித்த பேச்சு இருக்கும். அப்போதுகூட, அடுத்துவரும் நமிபியா அணிக்கு எதிரான ஆட்டத்திலும் ஸ்காட்லாந்து அணியை வென்றதுபோல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரன் ரேட்டை உயர்வாக வைத்திருந்தால் இந்திய அணி நிகர ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்குச் செல்லும்.

ஆனால், ஆப்கானிஸ்தானை நியூஸிலாந்து அணி வென்றுவிட்டால், இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு குறித்த பேச்சுக்கு இடமில்லை. ஆப்கானிஸ்தான், இந்திய அணி மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு கிளம்பிவிடலாம்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''கடந்த 2 முதல் 3 ஆண்டுகளாகப் பார்த்தால் இந்திய அணி சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. உள்நாட்டில் இருக்கட்டும், வெளிநாடுகளாகட்டும், சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடியிருக்கிறோம். ஆதலால், கடந்த 2 போட்டிகளில் நாங்கள் தோல்வி அடைந்ததை வைத்து எங்கள் திறமையைக் கணக்கிட முடியாது.

டி20 கிரிக்கெட்டில், எந்த அணிக்கும் எந்தப் போட்டியும் மோசமாக அமையலாம். அது ஒரு போட்டியிலோ அல்லது இரு போட்டிகளில்கூட மோசமாக அமையக்கூடும். ஆனால், இரு தோல்விகளை வைத்துக்கொண்டு அதிகமாக யோசிக்கக் கூடாது. அடுத்துவரும் வாய்ப்புகளை நோக்கி நகர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். கடந்த 2 போட்டிகளிலும் கிடைத்த பாஸிட்டிவ் விஷயங்களை எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவோம்.

அணியில் 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் இன்று நாங்கள் விளையாடினாலும், என்னுடைய பணி ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. நடுப்பகுதி ஆட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி நான் பயன்படுத்தப்படுகிறேன். அதைப்போலத்தான் இன்றும் பந்து வீசினேன். திட்டமிடலில் எந்தவிதமான மாற்றமும் இல்லை, நாங்கள் ஸ்காட்லாந்துக்கு எதிராகத்தானே விளையாடினோம். சரியான லைன் லென்த்தில் பந்துவீசினோம். வேறு எந்தத் திட்டமிடலும் புதிதாக இல்லை.

இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் பந்து ஆடுகளத்தில் சற்று பேட்ஸ்மேனை நோக்கி வந்ததால் வேகம் குறைவாக இருந்தது. ஆனால் 2-வது இன்னிங்ஸில் நாங்கள் பேட் செய்தபோது பேட்ஸ்மேனை நோக்கிப் பந்துவேகமாக வந்ததால் பேட்ஸ்மேனால் எளிதாக அடிக்க முடிந்தது.

முதலில் பேட் செய்திருந்தால் நிச்சயம் இதுபோன்ற ஆடுகளத்தில் ஸ்கோர் செய்திருக்க முடியாது. தொடக்கமே மோசமாக இருந்திருக்கும். நடுப்பகுதி ஓவரில் பேட் செய்வதும் கடினமாக இருந்திருக்கும். ஆதலால், டாஸில் வெல்வது மிகவும் முக்கியமானது. டாஸ் வென்றால் சேஸிங் செய்வது சிறந்தது.

ஆப்கானிஸ்தான், நியூஸிலாந்து இடையிலான ஆட்டம் அதிகமான கவனத்தை ஈர்த்திருக்கிறது. நாங்களும் எதிர்பார்த்திருக்கிறோம். ஒருவேளை ஆப்கானிஸ்தானை நியூஸிலாந்து வீழ்த்தினால், வேறு என்ன வேலை எங்களுக்கு இங்கு இருக்கிறது. மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவோம்''.

இவ்வாறு ஜடேஜா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x