

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளின் நாக் அவுட் சுற்றுக்கு முதல் முறையாக முன்னேறியது கிரீஸ். பிரிவு சி ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது கிரீஸ்.
இதே பிரிவில் கொலம்பியா அணி ஜப்பானை வீழ்த்தியிருப்பதால் இந்தப் போட்டியில் ஐவரி கோஸ்ட் அடுத்த சுற்றுக்கு முன்னேற டிரா போதுமானது. இதனாலேயே ஐவரி கோஸ்ட் வீரர் வில்ஃபிரெட் போனி 74வது நிமிடத்தில் கோல் அடித்து சமன் செய்தது போதும் என்று கருதி அந்த அணியின் மேலாளர் ஸ்ட்ரைக்கர்களான த்ரோக்பா, மற்றும் ஜெர்வின்ஹோ ஆகியோரை உள்ளே அழைத்து மாற்று வீரர்களைக் களத்திற்கு அனுப்பினார்.
1-1 என்று ஐவரி கோஸ்ட் விருப்பப்படி சென்று கொண்டிருந்த ஆட்டத்தில் 90+1-வது நிமிடத்தில் எதிர்பாராதது நிகழந்தது. கிரீஸ் வீரர் லாசரஸ் இடது புறம் அபாரமாக பந்தை பாக்ஸிற்குள் செலுத்த அங்கு சமாரஸ் கோல் அடிக்கத் தயாரானார். ஆனால் ஐவரி கோஸ்ட் வீரர் சியோ சமாரஸை ஃபவுல் செய்ய நடுவர் பெனால்டி கிக் கொடுத்தார்.
பெனால்டி கிக்கை அடித்த சமாரஸ் அதனை கோல் கீப்பருக்கு இடது புறம் கோலாக மாற்ற ஐவரி கோஸ்டின் கனவு முறிந்தது.
முன்னதாக இடைவேளைக்கு முன் 42வது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட் வீரர் டியோட் தனது பகுதியிலேயே பந்தை கோலோவுக்கு பாஸ் செய்ய நினைத்தார். ஆனால் சுற்றிலும் கிரீஸ் வீரர்கள் இருந்ததை அவர் எப்படி மறந்தார் என்று தெரியவில்லை.
பந்து கோலோவுக்குச் செல்லும் முன்பே கிரீஸ் வசம் வந்தது. கிரீஸ் வீரர் சமாரிஸ் பந்தின் மீது பாய்ந்தார், அவர் சமாரஸ் என்பவருக்கு பாஸ் செய்தார், அவர் பந்தை பாக்ஸிற்குள் எடுத்துச் சென்று மீண்டும் சமாரிசிடம் அளிக்க அவர் அதனை மிகவும் கூலாக கோலாக மாற்றி முன்னிலை பெற்றுத்தந்தார்.
பிறகு ஆட்டத்தின் 74வது நிமிடத்தில் கோலோ பந்தை நடுக்களத்தில் பிக் செய்ய கிரீஸ் வீரர்கள் அவரைத் தடுக்க முயன்றனர். ஆனால் எப்படியோ அவர்களைக் கடந்து பந்தைக் கடத்தி வந்த கோலோ அதனை ஜெர்வின்ஹோவுக்கு பாஸ் செய்தார். இடது புறம் நின்றிருந்த ஜெர்வின்ஹோ அதனை பக்கவாட்டில் இருந்த போனிக்கு அடிக்க அவர் அதனை அபாரமான கோலாக மாற்றி சமன் செய்தார்.
அதன் பிறகே 92வது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட் தவறு செய்ய பெனால்டி கிக் கிடைத்த கிரீஸ் கோல் அடித்து ஐவரி கோஸ்டை வெளியேற்றியது.
பிரிவு சி-யிலிருந்து கொலம்பியா, கிரீஸ் அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றன.