Published : 03 Nov 2021 03:57 PM
Last Updated : 03 Nov 2021 03:57 PM

ஏன் அஸ்வின் தொடர்ந்து ஒதுக்கப்படுகிறார்?- விசாரணை நடத்துங்கள்: பிசிசிஐக்கு அழுத்தம் கொடுத்த திலீப் வெங்சர்கார்

இந்திய அணியில் அஸ்வின் தொடர்ந்து ஒதுக்கப்படுவது குறித்து பிசிசிஐ விசாரணை நடத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கார் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அணியில் கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக பிப்ரவரி மார்ச் மாதத்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அஸ்வின் விளையாடினார். அதன்பின் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அஸ்வின் தேர்வு செய்யப்பட்டும் கடைசிவரை 4 போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆனால், டி20 உலகக் கோப்பைக்கு அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று ஆறுதல்பட்டாலும் அதிலும் எந்த பயனும் இல்லை. பயிற்சிப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய அனுபவ வீரர் அஸ்வினை, பாகிஸ்தான், நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் கேப்டன் கோலி தேர்வு செய்யவில்லை.

இந்திய அணியில் இடம் பெற்றும் ப்ளேயிங் லெவனில் அனுபவ வீரர் அஸ்வின் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதும், ஒதுக்கப்படுவதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கிரிக்கெட் அல்லாத பிற காரணங்களால் அஸ்வின் ஒதுக்கப்படுகிறாரா, கோலிக்கும், அஸ்வினுக்கும் இடையே ஏதும் ஈகோ பிரச்சினையா என்று யோசிக்க வைக்கிறது.

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நிக் காம்பட்டன் கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்திலும் அஸ்வின் புறக்கணிப்புக் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதில் “ ரவிச்சந்திரன் அஸ்வினுடன் கேப்டன் கோலிக்கு அப்படி என்ன கடினமான உறவு இருக்கிறது. இந்திய அணியிலிருந்து அஸ்வின் ஒதுக்கிவைக்கப்பட எப்படி அனுமதிக்கப்படுகிறார். கேப்டனுக்கு இவ்வாறு சர்வாதிகாரம் அனுமதிக்கப்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்காரும் அஸ்வின் புறக்கணிப்படுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அவர் செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அஸ்வினை நீண்டகாலம் அணியில் சேர்க்காமல் ஏன் வைத்திருக்கிறீர்கள். இது நிச்சயமாக பிசிசிஐயால் விசாரிக்கப்பட வேண்டும். அனைத்துப் பிரிவுகளிலும் அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசக்கூடியவர், 600 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.

இந்திய அணியின் மூத்த சுழற்பந்துவீச்சாளராக இருக்கும் அஸ்வினை ஏன் தேர்வு செய்ய மறுக்கிறீர்கள். என்னால்புரிந்து கொள்ள முடியவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் 4 போட்டிகளிலும் அஸ்வினைத் தேர்வு செய்யவில்லை, அதன்பின் டி20 உலகக் கோப்பைக்கும் ஏன் தேர்வு செய்தீர்கள். இது மர்மமாகவே இருக்கிறதே.

பாகிஸ்தான், நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி அடுத்தடுத்து தோல்வி அடைந்தபின், வீரர்கள் நம்பிக்கையற்று இருக்கிறார்கள் என்பது பார்த்தவுடனே தெரிகிறது. பயோபபுள், மனஅழற்ச்சி, அழுத்தம் போன்றவை வீரர்கள் நம்பிக்கையற்று இருக்க காரணமா என எனக்குத் தெரியவில்லை. இதுபோன்ற உடல்மொழியை நீண்டகாலத்தில் நான் இந்திய வீரர்களிடம் பார்த்ததில்லை. மிகவும் கவனக்குறைவுடனே இரு போட்டிகளிலும் வீரர்கள் விளையாடினர். அது பந்துவீச்சாக இருக்கட்டும், பேட்டிங்காக இருக்கட்டும் வீரர்கள் ஆர்வமில்லாமல் இருந்தனர்.

இவ்வாறு வெங்சர்க்கார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x